நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக அங்கு சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 319 பேரில் 219 பேர் பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மீதமுள்ள 100 பேரை இன்னும் தொடர்புகொள்ள முடியாததால், அவர்களின் நிலை குறித்து உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர்களை கண்டுபிடித்து மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இமயமலைப் பகுதியில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. போதோகோஷி, திரிசூலி, நாராயணி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் பலர் சிக்கினர். ஏராளமானோர் மாயமான நிலையில், நேபாள ராணுவம் உள்ளிட்ட மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேறும் சகதியுமாக காணப்படுவதால் மீட்புப் பணியில் பல்வேறு சவால்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை நூற்றுக்கணக்கான உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து மாயமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளையும் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் மிதந்து வந்த வங்கி லாக்கர்! பணத்தை பங்கு போட்ட மக்கள்! காத்திருந்த அதிர்ச்சி!
தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்பதற்காக அரசு சார்பில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய குழு டெல்லியில் முகாமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதுடன், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் இருப்பிடத்தை கண்டறியும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், தமிழகத்தில் இருந்து பல்வேறு குழுக்கள் மூலமாக 319 பேர் நேபாளம் சென்றதாகவும், அவர்களில் 219 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இவர்கள் விரைவில் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளையில், 100 தமிழர்களின் இருப்பிடம் குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை. அவர்களை கண்டறிய ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட வழிகளில் தேடுதல் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலம் சென்ற சில குழுக்களைச் சேர்ந்தவர்களின் நிலை தெரியாததால், அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்து அரசு அலுவலகங்களை அணுகி வருகின்றனர்.
திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிலரும் நேபாள ஆன்மிக சுற்றுலாவுக்கு சென்ற நிலையில், அவர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளம் ஏற்பட்டு பல நாட்கள் கடந்தும் தகவல் கிடைக்காததால் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.
நேபாளத்தில் சிக்கியுள்ள அனைவரையும் விரைவாக கண்டறிந்து பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்பதே தற்போது தமிழக குடும்பங்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் மாயமான உறவினர்களை கண்டுபிடிக்க புது வழி! போலீசாரின் QR Code ஏற்பாடு!