உதகை அருகே நடைபெற்ற ஒரு சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டா பெயர் மாற்றத்திற்காக ரூ.1.25 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பிக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியா கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், அரசு அலுவலகங்களில் நிலவும் லஞ்சப் பழக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் மற்றுமொரு முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த குந்தா நடுஹட்டி பகுதியைச் சேர்ந்த வசந்த் என்பவர், தனது தந்தை பெயரில் உள்ள சுமார் 3.5 சென்ட் நிலத்தை தான செட்டில்மெண்டாகப் பெற்று, அதைத் தனது பெயருக்கு மாற்ற விரும்பினார். அதற்காக ஆன்லைன் மூலம் பட்டா பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்த அவர், பிக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியாவைத் தொடர்பு கொண்டார். அப்போது உமா பிரியா, பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ரூ.1.50 லட்சம் லஞ்சமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அவ்வளவு தொகையைத் தன்னால் கொடுக்க முடியாது என வசந்த் தெரிவித்தார். இதையடுத்து உமா பிரியா, ரூ.1.25 லட்சம் கொடுத்தால் பணியை முடித்துத் தருவதாகச் சொன்னதாகத் தெரிகிறது.லஞ்சம் கொடுக்க விரும்பாத வசந்த், இது குறித்து நீலகிரி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது. காவல் துணை கண்காணிப்பாளர் ஜாய் தயாள் உத்தரவின்பேரில் ஆய்வாளர் சண்முகவடிவு மற்றும் உதவி ஆய்வாளர் சக்தி தலைமையிலான குழு, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வசந்திடம் கொடுத்தது.
இதையும் படிங்க: சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கைது..! போலீஸ் நடவடிக்கை.! புதிய சர்ச்சை..!
பின்னர் வசந்த் உமா பிரியாவைத் தொடர்பு கொண்டபோது, அவர் தான் பணி நிமித்தமாக நியூ அட்டுபாயில் இருப்பதாகக் கூறி, மஞ்சூரில் தனியார் வங்கியில் பணிபுரியும் ஒருவரிடம் பணத்தைக் கொடுக்குமாறு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.வசந்த் அந்த வங்கிக்குச் சென்று உமா பிரியா கூறியபடி அந்த நபரிடம் பணத்தைக் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணத்தைப் பறிமுதல் செய்தனர். அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு, கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியாவைக் கைது செய்தனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனை படுஜோர்..! மெத்தப்பட்ட மைன் பறிமுதல்..! 2 இளைஞர்கள் கைது.!