கேரளாவில் நிபா வைரஸின் தாக்கம் மீண்டும் விஸ்வருபம் எடுத்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு முதல் கேரளாவில் நிபா ஏழு முறை பதிவாகியிருந்தாலும், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட இதுவே முதல் முறை என்பதால் ஒட்டுமொத்த மாநிலமே ஹை அலர்ட்டில் உள்ளது. பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மற்ற மாவட்டங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பாலக்காட்டில் மேலும் ஒரு நிபா மரணம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பாலக்காடு மாவட்ட நிர்வாகமும் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாலக்காடு மன்னார்க்காட்டைச் சேர்ந்த 58 வயது நபர் நிபாவால் நேற்று உயிரிழந்தார். இறந்தவரின் வீட்டின் மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாப்பு தரங்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, கேரள எல்லையில் இருந்து தமிழகத்திற்குள் நிபா வைரஸ் தாக்கம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கேரளாவில் இருந்து கோவை வரும் மக்களுக்கு தெர்மல் ஸ்கேன் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: என்னது.. அருணாசலமா..?? எடுங்க முதல்ல.. தி.மலை பேருந்துகளில் இருந்த அருணாசலம் பெயர் நீக்கம்!
கேரளா மாநிலம் பாலக்காட்டில் நிபா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் கேரளா சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரபடுத்தி உள்ளனர். இதனிடையே தமிழக எல்லையோற மாவட்டமான கோவையில் உள்ள வாளையாறு, மீனாட்சிபுரம், கோபாலபுரம், ஆனைக்கட்டி, வீரப்பகவுண்டனூர், பட்டசாலை ஆகிய 6 சோதனைச் சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரபடுத்தியுள்ளனர்.
குறிப்பாக சுகாதார ஆய்வாளர் தலைமையில் ஒரு செவிலியர் என மூன்று பேர் குழுவினர் கேரளாவில் இருந்து கோவை வருவோருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனர். மேலும் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் முகவரி, விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவறான திருக்குறள்! ஆளுநர் அளித்த விருதால் சர்ச்சை... திரும்ப பெறப்பட்ட விவகாரம்..!