திராவிடர் கழகம் என்பது பதவிக்காக உருவான இயக்கம் அல்ல; கொள்கைக்காகத் தன்னையே அர்ப்பணித்த இயக்கம். எத்தகைய தடைகள் வந்தாலும் எந்த கொம்பனாலும் திராவிடர் கழகத்தை ஒருபோதும் அழிக்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி முழங்கியுள்ளார்.
திராவிடர் கழகத்தின் சார்பில் மதுரை ஒபுளா படித்துறையில் நடைபெற்ற ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80-ஆம் ஆண்டு விழா’ திறந்தவெளி மாநாட்டில் கலந்துகொண்டு தலைமையேற்று உரையாற்றிய அவர், 1946-ல் மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கருஞ்சட்டை மாநாட்டின் நினைவுகளை உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.
1946 மே 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் தலைமையில் வைகை ஆற்றுப் படுகையில் நடைபெற்ற மாநாட்டின் பந்தலை ஆரிய சக்திகள் திட்டமிட்டுத் தீயிட்டுக் கொளுத்தியதையும், கழகக் கொடிகளை எரித்துத் தொண்டர்கள் மீது வன்முறையை ஏவியதையும் சுட்டிக்காட்டினார். அந்த வன்முறைகளைத் தாண்டி 27 ஆண்டுகளுக்குப் பிறகு அதே மதுரையில் தமுக்கம் மைதானத்தில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலை எழுப்பப்பட்ட வரலாற்றை விவரித்த அவர், பெரியார் என்றால் எப்போதும் எதிர்நீச்சல் போட்டு வெல்வதுதான் அடையாளம் என்றார்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி... ஓய்வு பெற்ற சார் பதிவாளர் கைது...!

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடிய கி. வீரமணி, "ஒன்றியத்தில் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கம் செலுத்தும் ஆட்சி நடக்கிறது; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் மனுதர்ம ஆட்சியை நிலைநிறுத்த அவர்கள் துடிக்கிறார்கள்.
மருந்து கொடுக்க வேண்டிய அடித்தட்டு மக்களுக்கு உதவாமல், ஒரு நாளைக்கு ரூ.2,500 சம்பாதிக்கும் உயர் சாதியினரை ஏழைகள் எனக் கூறி அவர்களுக்கு EWS இடஒதுக்கீடு என்ற பெயரில் விருந்து படைத்துள்ளது மோடி அரசு. இந்த உயர் சாதி இடஒதுக்கீட்டைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று மு.க. ஸ்டாலின் அரசு உறுதியாக நின்றது; தற்போதைய அரசும் அதே கொள்கை உறுதியோடு அதைத் தொடர்ந்து எதிர்க்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
மேலும், நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு முறையை விளாசிய அவர், மருத்துவர்களாக வர வேண்டிய ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமே தேசியத் தேர்வு முகமையை (NTA) ஊழலின் ஊற்றுக்கண் என விமர்சித்துள்ளது. வெறும் கல்வி அமைச்சரை மாற்றுவதால் இதற்குத் தீர்வு கிடைக்காது; நீட் தேர்வையே முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
நீட் வேண்டாம் என்று ஆரம்பத்திலிருந்தே முழங்கியது திமுகவும் திகவும் மட்டுமே; அதனை வடமாநிலங்கள் இப்போதுதான் உணரத் தொடங்கியுள்ளன என்றார். தந்தை பெரியார், கலைஞர் வழியில் பெண்களுக்கான சொத்துரிமை மற்றும் சமூக நீதியைக் காக்கும் கொள்கைப் போரில் திராவிடர் கழகத்தின் கருப்புச் சட்டைப் படை எப்போதும் சமரசமின்றித் தொடர்ந்து களத்தில் நிற்கும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 7 பேரை உயிருடன் எரித்துக்கொன்ற பெண்.. தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!