தமிழ்நாட்டின் அழகிய சுற்றுலா தளமான ஊட்டியை இணைக்கும் பிரபலமான மலை ரயில் சேவை, 5-வது நாளாக வியாழக்கிழமை (அக்டோபர் 23) இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பாதை சேதங்கள் காரணமாக, நீலகிரி மலை ரயில் இயக்கம் தொடர்ந்து தடைபட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, அக்டோபர் 19 அன்று தொடங்கி, மேட்டுப்பாளையம்-குன்னூர்-ஊட்டி இடையேயான ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களாகவே இந்தப் பிரச்சினை தொடர்கிறது. கனமழையின் காரணமாக, குன்னூர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டு, ரயில் பாதையில் பெரிய கற்கள் விழுந்ததால் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே பொறியாளர்கள் தீவிரமாக பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர், சேதமடைந்த தண்டவாளங்கள் மற்றும் ராக்பார்கள் அகற்றப்பட்டு அவற்றிற்கு பதிலாக புதிதாக தண்டவாளம் மற்றும் ராக்பார்கள் பொருத்தப்பட்டன. ஆனால் மீண்டும் சேவை தொடங்குவது எப்போது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
இதையும் படிங்க: வெளுத்து வாங்கும் கனமழை.. உருண்டு விழுந்த பாறைகள்..!! 3வது நாளாக உதகை மலை ரயில் சேவை ரத்து..!!
ஊட்டி மலை ரயில், 1908-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் அமைக்கப்பட்ட 46 கி.மீ. நீளமுள்ள நெறுக்கமான ரயில் பாதை. யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடமாகக் கருதப்படும் இந்த ரயில், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் மற்றும் வளைவான பாதைகள் வழியாக பசுமையான தேயிலைத் தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் மலைகளை கடந்து செல்கிறது. காலை 7:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, 11:55 மணிக்கு ஊட்டியை அடையும் இந்தப் பயணம், சுற்றுலாப் பயணிகளுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கிறது.
இந்த ரத்து சுற்றுலா துறைக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் மாதம் ஊட்டிக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அதிகம். ஏற்கனவே டிக்கெட் புக் செய்திருந்த பலர், பஸ் அல்லது டாக்ஸி மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். "நாங்கள் குடும்பத்துடன் ஊட்டி வர முடிவு செய்திருந்தோம். ரயில் ரத்து என்று தெரிந்ததும் மிகுந்த ஏமாற்றம். இந்த அழகிய பயணத்தை இழக்க வேண்டியதாகிவிட்டது," என்று ஒரு பயணி கூறினார்.

ரயில்வே அதிகாரிகள், "பழுதுபார்க்கும் பணிகள் விரைவாக முடிவடையும். பயணிகளுக்கு மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். ஊட்டி மலை ரயில் போன்ற வரலாற்று சொத்துக்களைப் பாதுகாக்க, காலநிலை மாற்றங்கள் காரணமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த ரத்து, ஊட்டியின் அழகை ரசிக்க வரும் பயணிகளுக்கு ஒரு தற்காலிகத் தடையாக இருந்தாலும், விரைவில் மீண்டும் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "ஏட்டில் எழுதி நக்கினால் இனிக்காது"... கேரளாவை பார்த்து கத்துக்கோங்க ஸ்டாலின்... அன்புமணி ஆவேசம்...!