தமிழக அரசியல் களத்தில் தினசரி பரபரப்பு தொடரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) ஆதரவாளரும், ராஜ்ய சபா உறுப்பினருமான ஆர்.தர்மர் இன்று மாலை எடப்பாடி கே.பழனிசாமியை (இபிஎஸ்) சந்தித்து அதிமுகவில் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஓபிஎஸ் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு மாதங்கள்கூட முழுமையாக இல்லாத சூழலில், கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் உச்சத்தில் உள்ளன. ஏற்கெனவே என்டிஏ கூட்டணி இறுதி செய்யப்பட்டிருந்தாலும், தேமுதிக மற்றும் பாமக தலைவர் ராமதாஸ் அணியின் முடிவுக்காக இபிஎஸ் காத்திருக்கிறார். இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குடும்ப பிரச்சினை முடிவுக்கு வந்தது; இனி இருவரும் இணைந்தே பயணிப்போம்! டிடிவி தினகரன் நெகிழ்ச்சி!
இபிஎஸ்ஸை 'துரோகி' எனக் குறிப்பிட்டு கட்சி தொடங்கிய தினகரன், ஓபிஎஸ்ஸுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். ஆனால், திடீரென 'அண்ணன்' என அழைத்து கூட்டணியில் இணைந்தது ஓபிஎஸ் தரப்பை கலக்கமடையச் செய்தது. இதனால் ஓபிஎஸ்ஸின் கூட்டணி முடிவு தாமதமாவதாகக் கூறி, மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், வைத்திலிங்கம் போன்றோர் அணியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அதேபோல், ஜேசிடி பிரபாகர், செங்கோட்டையன் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்தனர். இத்தகைய விலகல்கள் ஓபிஎஸ் அணியை பலவீனப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியான ராஜ்ய சபா எம்.பி தர்மரின் விலகல் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த தர்மர், முக்குலத்தோர் சமூகத்தவர். அதிமுகவின் முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளராக இருந்த அவர், 2022ஆம் ஆண்டு ஓபிஎஸ் ஆதரவால் ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இப்போது இபிஎஸ் தரப்புக்கு மாறுவது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

ஏற்கெனவே முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த தினகரன் அதிமுகவுடன் கூட்டணி வைத்த நிலையில், தர்மரின் விலகல் ஓபிஎஸ் கூடாரத்தை கிட்டத்தட்ட காலியாக்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால், ஓபிஎஸ் அடுத்தகட்ட முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், இத்தகைய மாற்றங்கள் தமிழக அரசியலை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளன.
இதையும் படிங்க: மதுராந்தகத்தில் மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. போலீஸ் குவிப்பு, போக்குவரத்து மாற்றம்!