பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப்கார் சேவை நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளது. கோயில் நிர்வாகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருடாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சுமார் இரண்டு மாதங்களாக, அதாவது 64 நாட்களாக இந்த சேவை இயங்காமல் இருந்தது. பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக நாளை செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் ரோப்கார் மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு ரோப்கார் மிகவும் விரும்பப்படும் வசதியாகத் திகழ்கிறது. அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு வெறும் இரண்டு முதல் மூன்று நிமிடங்களில் சென்றடையும் இந்த சேவை, பக்தர்களுக்கு எளிதான பயணத்தையும் மலையின் இயற்கை அழகை ரசிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.

தினமும் காலை ஏழு மணி முதல் இரவு வரை இயங்கும் இந்த சேவை, ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிகளுக்காக ஒரு மாத காலத்திற்கு நிறுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பணிகள் சற்று நீடித்தன.ஜூலை மாதம் தொடங்கிய பராமரிப்புப் பணிகளில் ரோப்காரின் இயந்திரங்கள், கம்பி வடங்கள், சாப்ட்டுகள், பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து முக்கியப் பாகங்களும் கவனமாகப் பரிசோதிக்கப்பட்டன. பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் புதிய பாகங்கள் பொருத்தப்பட்டன. இயந்திரங்களின் உறுதித்தன்மை சோதனை செய்யப்பட்டு, தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. கீழ் நிலையத்தில் கூரை மாற்றம், உள்ளமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பணிகளும் நடைபெற்றன.
இதையும் படிங்க: #BREAKING பழனியில் அடுத்த அதிர்ச்சி...!! - இடும்பன் கோயிலில் வெள்ளி வேல் மாயம்... 142 கிராம் தங்கமும் திருடு போனதால் பரபரப்பு...!
அனைத்துப் பணிகளும் முடிவடைந்த பிறகு சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. பொறியாளர்கள் திருப்தி அடைந்த நிலையில் சேவையை மீண்டும் தொடங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பராமரிப்புக் காலத்தில் பக்தர்கள் படிப்பாதை, யானைப் பாதை மற்றும் மின் இழுவை ரயில் மூலம் மலைக்கோயிலுக்குச் சென்று வந்தனர். பலர் ரோப்கார் இல்லாததால் சிரமப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர். குறிப்பாக முதியோர், சிறுவர்கள் மற்றும் உடல்நலக் குறைவுள்ளவர்களுக்கு ரோப்கார் மிகுந்த உதவியாக இருந்தது. இப்போது சேவை மீண்டும் தொடங்கும் என்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை முதல் வழக்கம்போல் காலை ஏழு மணி முதல் இரவு வரை ரோப்கார் இயக்கப்படும்.
இதையும் படிங்க: பழனி நில மோசடி வழக்கு... நிலத்தை வாங்கியதாக கைதானவர்களுக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!