பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக வெளியிட்ட அறிவிப்பு மாநிலத்தின் வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது என்று வலியுறுத்திய ஸ்டாலின், இத்தகைய மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல எனக் குறிப்பிட்டுள்ளார். மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிகவும் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த முக்கியத் திட்டத்தை நிராகரிப்பது மாற்றம் அல்ல; மாறாக பெரும் ஏமாற்றம் என விவரித்த ஸ்டாலின், பரந்தூர் இடம் அனைத்து மாற்று வழிகளையும் ஆய்வு செய்த பிறகே தேர்வு செய்யப்பட்டது என்றும் நில கையகப்படுத்தல் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டன என்றும் தெரிவித்துள்ளார். பல கட்ட தயாரிப்புப் பணிகளும் அனுமதிகளும் ஏற்கனவே பெறப்பட்டுள்ள நிலையில், புதிய அரசு இப்போது மீண்டும் தொடக்கத்திலிருந்து இடத்தைத் தேர்வு செய்து முழு செயல்முறையையும் மேற்கொண்டால் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையை பாதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.திராவிட மாதிரி அரசின் கீழ் தமிழ்நாடு முதலீட்டாளர்களுக்கு முதன்மையான இடமாக இருந்தது. இந்த முடிவு மாநிலத்தை அட்டவணையின் கீழே தள்ளிவிடும் அபாயத்தை உருவாக்கும். போட்டி மாநிலங்களுக்கு இது ஜாக்பாட்டாக அமையும் என ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: வீம்புக்காக தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்காதீங்க..! பரந்தூர் ஏர்போர்ட் ரத்து... நயினார் கண்டனம்..!!
தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு டிரில்லியன் டாலர் அல்லது 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்குகளை அடைவது சாத்தியமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் தவெக அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி என திமுக தலைவர் வர்ணித்துள்ளார். பரந்தூர் திட்டம் கைவிடப்படுவது வெறும் ஓர் உள்கட்டமைப்புத் திட்டத்தை நிறுத்துவது மட்டுமல்ல; மாநிலத்தின் எதிர்காலப் பொருளாதார வாய்ப்புகளையும், தொழில் முதலீடுகளையும், இளைஞர்களின் வாய்ப்புகளையும் பாதிக்கும் பெரும் பின்னடைவாக அமையும் என்பதே அவரது நிலைப்பாடாக உள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... செந்தில் பாலாஜிக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் உத்தரவு... தவெகவுக்கு பின்னடைவு...!