தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் தரப்பு முக்கிய அரசியல் முடிவுகளை எடுத்து வருகிறது. ஜனவரி 7 அன்று சென்னையில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்த அன்புமணி ராமதாஸ், தனது கட்சி NDA கூட்டணியில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அ.தி.மு.க. தலைமையிலான இந்தக் கூட்டணியில் பாஜகவுடன் இணைந்து பாமகவும் இடம்பெற்றுள்ளது. கூட்டணி உடன்பாட்டின்போது, பாமகவுக்கு 18 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தத் தொகுதிகளில் சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி (கிங்கீ), விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார் கோயில் (ஒதுக்கீடு), கீழ்வேளூர் (ஒதுக்கீடு), பெரம்பூர், சேலம் வடக்கு, அம்பத்தூர் உள்ளிட்டவை அடங்கும். இந்த ஒதுக்கீடு அ.இ.அ.தி.மு.க. தலைமையில் இறுதி செய்யப்பட்டது.

18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். குறிப்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகுதியில் திலகபாமா களம் காண்கிறார். இந்த தொகுதி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், பாமகவின் தேர்தல் அறிக்கையை கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், திமுக அளித்துள்ள தேர்தல் அறிக்கையானது கதாநாயகனும் இல்லை வில்லனும் இல்லை என்று தெரிவித்தார். படித்த ஒரு கோடி 30 லட்சம் இளைஞர்களில் 5 லட்சம் இளைஞர்களுக்கு முதல் கட்டமாக அரசு வேலை என்று அன்புமணி வாக்குறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் எலக்ஷன்..! களமாடும் அன்புமணி... பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!!
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று அன்புமணி வாக்குறுதி கொடுத்துள்ளார். மருத்துவம், மின்வாரியம் உட்பட அரசு மற்றும் தனியார் துறை மூலமாக மொத்தம் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றார். உடனடியாக தமிழ்நாடு முழுவதும் 40,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் இன்றைய தினத்தில் தமிழகத்தின் முதன்மையான பிரச்சனை போதை தான் என்றும் குறிப்பிட்டார். பட்டப்படிப்பு முடித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். என் டி ஏ ஆட்சி அமைந்த உடன் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் பல்வேறு வாக்குறுதிகளை அன்புமணி கொடுத்துள்ளார். போதைப் பொருள் குறித்த தகவல் தெரிவித்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு மற்றும் பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: விஜய்க்கு போட்டி யார்? பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!! முழு விவரம்..!!