புதுச்சேரி: புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் போலி மருந்துகள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்க உள்ளது. கடந்த செப்டம்பரில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போலி மருந்துகள், மூலப்பொருள்கள், பேக்கேஜிங் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செட்டித்தெருவில் உள்ள சன் பார்மா நிறுவனத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் போலி மருந்துகள் விநியோகிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து கம்பெனி உரிமையாளர் ராஜா (வள்ளியப்பன்), ஆளும் என்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரியாங்குப்பம் மணிகண்டன் உள்ளிட்ட 26 பேரை கைது செய்தனர்.
தொடர் சோதனைகளில் திருபுவனை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடோன்களில் இருந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜிஎஸ்டி தாக்கலில் மோசடிக்கு உதவிய முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தியும் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய புதுச்சேரி போலி மருந்து தயாரிப்பு!! வழக்கை கையிலெடுத்தது சிபிஐ!! சாட்டை சுழலும்!!

வழக்கில் ஆளும் கட்சி அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட 60 பேர் தொடர்பு உள்ளதாக சிபிசிஐடி போலீசார் பட்டியல் தயாரித்தனர். பல நூறு கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தின. இதன்படி புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
நேற்று சிபிசிஐடி போலீசார் வழக்கின் முதல் தகவல் அறிக்கை, கைதானவர்கள் விவரங்கள், ராஜா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஆன்லைன் மூலம் டெல்லி சிபிஐ அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். சிபிஐ அதிகாரிகள் ஜனவரி 6ஆம் தேதி புதுச்சேரி வந்து விசாரணையைத் தொடங்க உள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறதா என்று அமலாக்கத்துறையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
இந்த வழக்கு புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி மருந்து விவகாரம் மக்கள் உயிருடன் தொடர்புடையது என்பதால் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய புதுச்சேரி போலி மருந்து தயாரிப்பு!! வழக்கை கையிலெடுத்தது சிபிஐ!! சாட்டை சுழலும்!!