முகுந்தனுக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டது அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. கட்சியே இரண்டாக உடையும் சூழலுக்கு சென்ற நிலையில், ராமதாஸ் - அன்புமணி மோதலை தொடர்ந்து பாமக இளைஞரணி தலைவர் பதவியை முகுந்தன் ராஜினாமா செய்தார். அன்று முதல் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் இருவரும் இரு துருவங்களாக மாறிவிட்டனர். கட்சியை தூண்டாடி தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களையும் பொதுக்குழு கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

முகுந்தனுக்கு பதவி வழங்கியதால் ஏற்பட்ட பிரச்சனையே இன்னும் முடியாத நிலையில், அன்புமணியை செயற்குழுவில் இருந்த நீக்கிய ராமதாஸ் தனது மகள் ஸ்ரீகாந்தியை செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வைத்துள்ளார். அன்புமணி தனக்கு எதிராக செயல்படும் நிலையில் அன்பு மணிக்கு எதிராக தனது மகளை களம் இறக்கி விட்டாரா ராமதாஸ் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பு நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவு எடுக்க ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தலைமைக்கு கட்டுப்படாமல் கட்சியை பலவீனப்படுத்தும் நபர்கள் மீது கட்சி விதியின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.. கட்சி நிறுவனரே தலைவர் பொறுப்பையும் ஏற்ற பின்னரும் தானே தலைவர் என பொதுவெளியில் பேசுவதாக அன்புமணிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ராமதாசுக்கே முழு அதிகாரம்! அன்புமணி இப்படியே பேசுனா...செயற்குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம்

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ராமதாஸ், தனது வலியை உணர்ந்தவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலை கூட்டணியில் இணைந்து சந்திக்க இருப்பதாகவும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியை ஆரம்பித்து விட்டதாகவும் தெரிவித்தார். வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளவர்கள் விருப்ப மனுவை கொடுக்க ஆயத்தமாக வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் பூம்புகார் மகளிர் மாநாட்டில் குறைந்தபட்சம் 2 லட்சம் பேரையாவது கூட்ட வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தலில் ஏ ஃபார்ம், பி ஃபார்ம் என அனைத்திலும் கையெழுத்து போடும் உரிமை தனக்கே உள்ளதாகவும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில்தான் தேர்தலை சந்திக்கிறோம் முடிவு எடுத்துள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: பாமகவில் ட்விஸ்ட்! அன்புமணிக்கு போட்டியாக களமிறங்கிய சகோதரி! பரபரக்கும் அரசியல் களம்