தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்காக முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் வரும் செப்டம்பர் 10ம் தேதி லண்டன் பயணம் மேற்கொள்ள உள்ளார். இது அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாகும்.
தொழில்துறை அதிகாரிகள் மற்றும் Guidance Tamil Nadu அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவுடன் செல்லும் முதலமைச்சர், செப்டம்பர் 16 வரை பிரிட்டனில் தங்கி, முன்னணி நிறுவனத் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்தப் பயணம் நடைபெறும் அதே காலகட்டத்தில், லண்டனுக்கு அருகிலுள்ள சில்வர்ஸ்டோன் பந்தயத் தடத்தில் மிச்சலின் லெ மான்ஸ் கப் கார் பந்தயம் செப்டம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தப் பந்தயத்தில் நடிகரும் சர்வதேச அளவில் கார் பந்தய வீரருமான அஜித்குமார், தனது அணியான அஜித் ரெடண்ட் பை விராஜ் மூலம் LMP3 பிரிவில் பங்கேற்கிறார். இதனால், முதலமைச்சர் விஜய் இந்தப் பந்தயத்தை நேரில் காண வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சகட்டு மேனிக்கு பேசக்கூடாது… ஆதரவு அவங்க நிலைப்பாட்டை பொறுத்துதான்.. போர்க்கொடி தூக்கிய CPM சண்முகம்..!!

முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர், இளைஞர்களிடையே மோட்டார் விளையாட்டுகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என அறிவித்தார். அத்துடன் ஃபார்முலா 1 முதல் ஃபார்முலா 4 வரை பன்னாட்டுப் பந்தயங்களை நடத்தக்கூடிய சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடங்களும் பயிற்சி மையங்களும் உருவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த அஜித்குமார், “மோட்டார் விளையாட்டு உள்ளிட்ட அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி” எனப் பாராட்டியிருந்தார். அஜித்குமார் இதுவரை மிச்சலின் லெ மான்ஸ் கப் தொடரின் பல்வேறு சுற்றுகளில் பங்கேற்று இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளார்.
சில்வர்ஸ்டோன் சுற்று, அவரது தொடரின் முக்கியப் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. முதலமைச்சரின் லண்டன் பயணம் முதலீட்டு ஈர்ப்புடன் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறை வளர்ச்சிக்கான அவரது ஆர்வத்தையும் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது. இந்த இரட்டை நிகழ்வுகள், தமிழக ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: குண்டு கட்டாக வெளியேற்றம்... பேரவையில் பரபரப்பு.! திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு..!!