மெரினாவில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடந்த நிலையில், கலச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக அணிவகுப்புகள் நடைபெற்றது. இந்திய திருநாட்டின் 77-வது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவின் இறுதி அணிவகுப்பு ஒத்திகை இன்று காலை நடைபெற்றது.
ஜனவரி 26ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்ற உள்ளார். அந்த நிகழ்ச்சியில் கலச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக அணிவகுப்புகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அந்த அணிவகுப்பிற்கான இறுதி ஒத்திகை நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைப்பது போன்று ஒத்திகை செய்யப்பட்டது.
அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது, இதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இறுதி ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் வருவது போல் ஒத்திகைகள் மற்றும் ராணுவம், கடற்படை பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் பிரிவு, வான்படை பிரிவு, கடலோர காவல்படை பிரிவு, முன்னாள் ராணுவத்தினர் படைப்பிரிவு, ஆர் பி எப் படைப்பிரிவு, காவல்துறை முழு பொறுப்பு ஜிப்சி, தமிழ்நாடு சிறப்பு காவல் பெண்கள் படைப்பிரிவு, தமிழ்நாடு ஆயுத படை கூட்டு குழல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை பிரிவு, கர்நாடகா சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு கமாண்டோ படை பிரிவு, என எண்ணற்ற பிரிவுகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது.
இதையும் படிங்க: குடியரசு தினம்: திருச்சி ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு.. பயங்கரவாத அச்சுறுத்தலால் தீவிர நடவடிக்கை..!!

குறிப்பாக கர்நாடக மாநில பாரம்பரிய கலை நிகழ்ச்சியான லம்பானி, ராஜஸ்தானின் ஜாரி நடனம், அருணாச்சலப் பிரதேசத்தின் பாரம்பரிய நடனமான ஜூஜூஜா ஒத்திகையும் நடைபெற்றது. மேலும் குடியரசு தினத்தன்று முதலமைச்சர் வழங்க உள்ள விருதுகளான அண்ணா பதக்கம், வேளாண்மை விருது, காந்தியடிகள் காவலர்கள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்திற்கான விருதுகள் வழங்குவது போன்ற ஒத்திகைகள் நடைபெற்றன.
அதேபோல் செய்தித்துறை சார்பாக ஒத்திகைகள் நிகழ்ச்சிகளும் இன்று நடைபெற்றது. அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றதையொட்டி காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும், குடியரசு தினத்தன்றும் சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க: களைகட்டப்போகும் 77வது குடியரசு தின விழா..!! டெல்லியில் பிரம்மாண்ட கொண்டாட்டங்கள்..!! 10,000 பேருக்கு அழைப்பு..!!