சென்னை: தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது மக்களின் அன்றாட செலவை அதிகரித்துள்ள நிலையில், வியாபாரிகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
போதிய மழைப்பொழிவு இல்லாதது, நெல் விளைச்சல் குறைவு, லாரி வாடகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரிசி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் தற்போது 21 லட்சம் டன் அரிசி பற்றாக்குறை நிலவுகிறது. இதை ஈடுகட்ட ஆண்டுக்கு 30 லட்சம் டன் உயர் ரக சன்ன அரிசியை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிரடியாய் உயர்ந்த அரிசி விலை! இல்லத்தரசிகளுக்கு பேரிடி! விளைச்சல், வரத்து குறைவால் சோகம்!
கடந்த ஆண்டு கர்நாடகாவில் சில பகுதிகளில் மழை பொழியாததால் உயர் ரக சன்ன நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் லாரி வாடகை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் அரிசியின் விலை கிலோவுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த பருவத்தில் நெல் விளைச்சல் கணிசமாகக் குறைந்தது. கோடை மழை மற்றும் தற்போதைய பருவ மழை எதிர்பார்த்த அளவு இல்லாததால் கோடை மற்றும் குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் குறுவை சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை.

அரிசி ஆலைகளுக்கு மின்சார நிலை கட்டணம் 5,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆலை இயங்காவிட்டாலும் இந்தத் தொகையை செலுத்த வேண்டிய நிலை உள்ளதால், இந்த செலவும் அரிசி விலையில் சேர்க்கப்படுகிறது. வரும் காலங்களில் அரிசி விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாநில செயலர் பரணீதரன் கூறுகையில், “கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நெல் இருப்பு குறைவாக உள்ளதால் நமக்கு தேவையான அளவு நெல் கிடைப்பது சிரமமாக உள்ளது. சீரக சம்பா அரிசி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 84 ரூபாயாக இருந்தது. தற்போது 180 ரூபாயாக உயர்ந்துள்ளது. வறட்சி மற்றும் உற்பத்திக் குறைவு காரணமாக விலை மேலும் அதிகரிக்கும்” என்றார்.
மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசி விலை உயர்வு அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அனைத்து பஸ்களிலும் மகளிருக்கு ஃப்ரீ!!! முதல்வர் விஜய் போட்ட உத்தரவு! அறிக்கை தயாரிப்பு பணி தீவிரம்!