தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில், தி.மு.க.வின் மாநில அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது, அவரது முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய ஆர். எஸ். பாரதி, எஸ். ஐ. ஆர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை நமது முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள 64,000 பூத்துகளிலும் பி.எல்.ஏ.க்களை நியமித்துச் சிறப்பாகப் பணியாற்றச் செய்துள்ளார் என்று கூறினார். தி.மு.க. தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இந்தப் பணியைச் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையமே பாராட்டி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தப் பணி இதோடு முடிந்து விடவில்லை என்றும், வரும் 14ஆம் தேதி வாக்காளர் வரை பட்டியலை வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 14ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் வரை கட்சியினர் கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும், குறிப்பாகச் சிறுபான்மையினர் இருக்கும் பகுதிகளில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும் என்றும் தி.மு.க.வினருக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: "இந்து விழாக்களுக்கு வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்?" - முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர். எஸ். பாரதியிடம், "தமிழ்நாடு அயோத்தி போல் மாறுவதில் தவறில்லையென பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?" என்று கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ஆர். எஸ். பாரதி, "பா.ஜ.க.வில் புதிதாக வந்து குடியேறியவர் நயினார் நாகேந்திரன், அதனால் அவ்வாறுதான் பேசுவார். விரைவில் அவர் அங்கிருந்து தானாகவே வெளியேறி விடுவார்" என்று கிண்டலாகப் பதிலளித்தார். மேலும், அயோத்தியிலேயே சென்ற தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டது. அதேபோலத் தமிழ்நாட்டிலும் பா.ஜ.க.வின் நிலை அப்படித்தான் உள்ளது. அதைச் சுட்டிக்காட்டித்தான் கனிமொழி பேசியுள்ளார் என்றும் ஆர். எஸ். பாரதி கூறினார்.
இதையும் படிங்க: "கார்த்திகை தீபம் காவித் தீபமாக மாறிவிடக்கூடாது!" மதவாத அரசியலை முதல்வர் முடியத்துள்ளார் - அமைச்சர் செழியன் அதிரடி!