திருப்பூர் மாநகராட்சியின் குப்பை கழிவுகளை பாறைக்குழிகளில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்லோருக்கும் மேற்பட்ட மக்கள் அறவழியில் போராடினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 30ஆம் தேதி இச்சிப்பட்டி ஊராட்சியில் நடந்த இதே மாதிரியான அடக்குமுறையை இந்நிகழ்வு நினைவுபடுத்துவதாகவும் அப்போதும் காவல்துறையின் கொடுங்கோன்மைச் செயலால் ஒரு பெண்ணின் கால் முறிந்து, ஒரு நபர் தற்கொலை முயற்சி செய்ததாகத் தகவல்கள் வெளியாகி இருந்ததாகவும் தெரிவித்தார். இந்த இரு நிகழ்வுகளும், மக்களாட்சி மாண்பைக் காலில் போட்டு மிதிக்கும் வன்முறை செயல் என்ற குற்றம் சாட்டினார்.

திருப்பூரின் விரிவான தொழில்துறை மற்றும் நகரமயமாதல் காரணமாக, நகரில் நாள் ஒன்றிற்கான குப்பை உற்பத்தி ஏறக்குறைய 4.80 மெட்ரிக் டன் என்ற அளவில் அதிகரித்துள்ளது என்றும் விதிமீறலுக்கு எதிராக, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் திருப்பூர் மாநகராட்சிக்கு ரூபாய் 3.15 கோடி அபராதம் விதித்து, மறுசுழற்சிக்கு உட்படுத்தாமல் கழிவுகளைப் பொதுவெளியில் கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் சீமான் கூறினார்.
இதையும் படிங்க: மக்களை ஏமாத்தாதீங்க! உடனே அமல்படுத்துங்க... பசுமை தீர்ப்பாய உத்தரவை சுட்டிக்காட்டிய சீமான்
இருந்தபோதிலும், இந்தத் தீர்ப்பு வந்த ஒரு வாரத்திற்குள்ளேயே மீண்டும் வேறு ஒரு பகுதியில் குப்பைகளை நகராட்சி கொட்டி வந்தது பேரவலம் என்றும் அரசும் விதிகளைக் கடைபிடிக்காமல், அதற்கான அபராதமும் விதிக்கப்பட்டு, பின்னரும் விதிகளைக் காற்றில் பறக்கவிடுவது ஆட்சித் தோல்வியின் உச்சம் எனவும் கூறினார். அதனைக் கேள்வி கேட்கும் பொதுமக்களை அடக்கி ஒடுக்குவது ஆளும் அரசின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றது என்றும் திமுக அரசு இனியாவது குப்பைக்கழிவுகளை உரிய மறுசுழற்சிக்கு உட்படுத்தி, திடக்கழிவு மேலாண்மை விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: 'மரங்களை பாதுகாப்பது நமது கடமை'.. மரங்கள் மாநாட்டில் உணர்ச்சி பொங்க பேசிய சீமான்..!!