தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் கீழ் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என்ற பெயரில் வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆகிய 4 துறைகளையும் ஒருங்கிணைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பழங்கள், காய்கறிகள், பூக்கள், காளான்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்தல் போன்ற பணிகளை ஒருங்கிணைக்கும் தோட்டக்கலைத்துறையை, மற்ற துறைகளுடன் ஒன்றாக இணைப்பது அதன் தனித்துவத்தை இணைக்கச் செய்யும் கொடுஞ்செயல் என்றும் கூறினார்.
தமிழ்நாடு அரசால் கடந்த 2008ஆம் ஆண்டு வேளாண் துறையிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட தோட்டக்கலைத் துறை, கடந்த 17 ஆண்டுகளாக வேளாண் உற்பத்தியில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறது என்றும் தமிழ்நாடு முழுவதும் வெறும் 14 விழுக்காடு சாகுபடி பரப்பில் மட்டுமே தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்பட்டாலும், மொத்த வேளாண் உற்பத்தியில் 32.5 விழுக்காடும், விளைபொருள் ஏற்றுமதியில் 65 விழுக்காடும் பங்களிக்கிறது என்றும் தெரிவித்தார். இச்சூழலில், தனித்துவமிக்கத் துறைகளை மீண்டும் ஒருங்கிணைப்பது என்பது மறைமுகமாக தோட்டக்கலைத் துறையின் சீரான வளர்ச்சியை முடக்கும் செயல் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: திராவிடம் எங்கே இருக்கிறது..? இப்படி பேசியவர் தான் திருமா... இப்ப என்னமோ..! சீமான் காட்டம்...!
தமிழ்நாடு அரசு உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என்ற பெயரில், வேளாண் துறைகளை ஒன்றிணைப்பதைக் கைவிட்டு, தோட்டக்கலை மற்றும் வேளாண் துறைகளின் தனித்துவத்தைப் பாதுகாத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பொருட்செலவை வைத்து திரைக்கலையை மதிப்பிடுவதா? சல்லியர்கள் படத்திற்கு சீமான் ஆதரவு...!