ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியில் வசிக்கும் மீனவர் ஆரோக்கிய கிங்சன் கடந்த 6 ஆம் தேதி காலை இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றபோது மாலை 3 மணியளவில் கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள துயரச்செய்தியறிந்து மனவேதனை அடைந்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நான்கு நாட்களாகியும் காணாமல்போன தம்பி ஆரோக்கிய கிங்சன் நிலை என்னவானது என இதுவரை அறிய முடியாமல் தவித்து நிற்கும் அவருடைய குடும்பத்தின் நிலை பெருந்துயரைத் தருகின்றது எனக் கூறியுள்ளார்.
அவருடைய குடும்பத்திற்கு நம்பிக்கையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக கூறிய சீமான், ஆரோக்கிய கிங்சன் காணாமல்போய் 4 நாட்களாகியும் அவரை மீட்க எவ்வித தீவிர நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது என்று கூறினார்.

அன்றாடம் மீன்பிடி தொழிலுக்குச் சென்று தனது குடும்பத்தைப் பராமரித்து வந்த தம்பி ஆரோக்கிய கிங்சன் மட்டும்தான், வயதான ஏழை பெற்றோர் மற்றும் உடல் நலிவுற்ற தங்கை மெர்சிலின் ஆகிய மூவருக்கும் உறுதுணையாக இருந்து வந்துள்ளார் என்றும் அந்த ஒரே மகனும் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்து வாழ வழியின்றி தவிக்கும் குடும்பத்தினர் அரசின் உதவிக்காக ஏங்கி நிற்கிறார்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: “நான் மாநாடு நடத்தனது பத்தி யாருகிட்ட கேட்டீங்க?”... விஜய் பற்றிய கேள்வியால் செம்ம டென்ஷன் ஆன சீமான்...!
எனவே வறுமை மற்றும் அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உதவிக்கோரக்கூடத் தெரியாத அறியாமை நிலையில் இருக்கும் ஆரோக்கிய கிங்சன் குடும்பத்தினரை வேறு எந்த அரசியல் கட்சியும் சந்திக்காத நிலையில், நாம் தமிழர் கட்சி உறவுகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, உதவிகள் புரிந்து உற்ற துணையாக இருந்து வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.
ஆகவே, தமிழ்நாடு அரசு கடலில் விழுந்து காணாமல்போன மீனவர் ஆரோக்கிய கிங்சனை விரைந்து கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மகன் நிலை என்னவென்று அறியாது பெருந்துயரில் தவிக்கும் அவருடைய குடும்பத்திற்கு மாத உதவித்தொகை உள்ளிட்ட வாழ்வாதார உதவிகள் புரிய வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தல்: பிப்.21ம் தேதி முக்கிய அறிவிப்பு!! அதிரடியாக களமிறங்கிய சீமான்..!!