தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அறிவிப்புப் பலகை வைக்கும் கேரள அரசின் அத்துமீறலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்திற்குட்பட்ட தாலூரில் கேரள மாநில அரசு மலையாள மொழியில் எல்லை அறிவிப்புப் பலகை வைத்ததை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பெரும் போராட்டம் நடத்தி அகற்றிய நிலையில், நேற்று மீண்டும் கேரள அரசு அத்துமீறி அறிவிப்புப் பலகை வைத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அத்துமீறி கேரள அரசு அறிவிப்புப் பலகை வைப்பதை திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்றும் கூறினார். தமிழக எல்லைக்குள் தமிழ்நாடு அரசு தமிழில் வைத்த அறிவிப்பு பலகையை உடைத்து எறிந்துவிட்டு, கேரள அரசு மலையாள அறிவிப்பு பலகையை அத்துமீறி வைத்துள்ளது என்றும் கூறினார்.

இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் நேற்று இரவு முதல் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கேரள மாநில அரசு கேரள காவல்துறையினரை குவித்து, தமிழக எல்லைக்குள் அத்துமீறி நடப்பட்ட அறிவிப்பு பலகையைப் பாதுகாத்து வருகிறது என்றார். இதுதான் திமுக அரசு மண்ணையும், மானத்தையும் காக்கும் முறையா என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: கூட்டணி வெக்காமையே என்னால ஜெயிக்க முடியும்..!! ஒரே போடு போட்ட சீமான்..!!
நீலகிரி மாவட்டம் தாலூரில் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிக்குள் கேரள மாநில அரசு அத்துமீறி வைத்துள்ள எல்லை பலகையை உடனடியாக அகற்றி, உடைத்து எறியப்பட்ட தமிழ்நாட்டின் எல்லை பலகையை உடனடியாக நிறுவ வேண்டும் என்றும் இதுபோன்ற எல்லை தாண்டிய அத்துமீறல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கத் தமிழ்நாடு அரசு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து கேரள அரசிடம் கடும் எதிர்வினை ஆற்றிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: இன்னும் எத்தன உயிர பலிவாங்க போகுதோ திமுக..! நாங்குநேரி கொடூரத்திற்கு சீமான் கண்டனம்..!