மாலி நாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த 5 தமிழர்களை அந்நாட்டுப் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திய செய்தி அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். கடத்தப்பட்ட தமிழர்களை மீட்க இந்திய, தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் கூறினார்.
குடும்ப வறுமை காரணமாக மேற்கு ஆப்ரிக்க நாடான மாலி நாட்டிற்குப் பணிக்குச் சென்ற தென்காசி மாவட்டம், கடையநல்லூர், முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இசக்கிராஜா, கண்மணியாபுரத்தை சேர்ந்த தளபதி சுரேஷ், மற்றும் துாத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் புதியவன், நாரைகிணறு பொன்னுதுரை, வேப்பங்குளம் பேச்சிமுத்து உள்ளிட்ட 5 தமிழர்களை முகமூடி அணிந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றதால், அவர்களின் குடும்பத்தினர் பெரும் துயரத்திற்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்தார்.

கடத்தப்பட்டு 5 நாட்களாகியும், கடத்தப்பட்டவர்களுடன் அவர்களின் குடும்பத்தினர் இதுவரை தொடர்புகொள்ள முடியாததால், அவர்களின் நிலை என்னவென்று அறியாது குடும்பத்தினர் தவித்துப்போயுள்ளனர் என்றும் இதுகுறித்து தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசின் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பலமுறை புகாரளித்தும் கடத்தப்பட்ட தமிழர்களை மீட்க எவ்வித துரித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்துவது அவர்களின் உயிரோடு விளையாடும் கொடுஞ்செயல் எனவும் சீமான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான் வரேன்..! களமிறங்கும் சீமான்..! பல்கலைக்கழக ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவு!
தமிழ்நாடு அரசு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகம் மூலமும், இந்திய அரசு வெளியுறவுத்துறை மற்றும் மாலியில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமும் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: " இன்னைக்கு ஒரு புடி ..." - சீமான் பிறந்தநாள் ... தம்பிகளுக்கு 18 வகை உணவுடன் தடபுடல் விருந்து ...!