திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2023 ஜூன் மாதம் 14 வயது சிறுமி ஒருவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மறுநாளே சிறுமியை பெற்றோர் அழைத்துச் சென்று விட்டனர். குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்றனர். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆனால் அப்போது ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரமுகரின் தலையீட்டால் முறையான விசாரணை நடைபெறாமல், குழந்தையை குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்து விட்டனர். இந்த சம்பவம் 2025 டிசம்பர் மாதம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு சென்றது. அதன்பேரில் முறையான விசாரணை நடத்துமாறு திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜனவரி 3-ஆம் தேதி ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணையை மீண்டும் தொடங்கினர். அப்போது அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: "ஸ்டேஷனே இல்லாத ஊர்ல எப்படி டீ வித்தாரு?" பாஜக ஆட்சியை தகர்ப்போம் - நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம்!
விசாரணையில் தெரிய வந்ததாவது: சிறுமி 2021-ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு படித்தபோதே முதல் முறையாக பாலியல் தொந்தரவுக்கு ஆளானார். பள்ளி விடுமுறையில் கரூரில் தாத்தா வீட்டுக்கு சென்றபோது, அங்கு ஹோட்டல் தொழிலாளி ஒருவர் அவரை பலமுறை பலாத்காரம் செய்தார். இதை சிறுமி பாட்டியிடம் கூறியபோதும் அவர் கண்டுகொள்ளவில்லை.

பின்னர் திருச்சியில் ஏழாம் வகுப்பு படித்தபோது, தாத்தா முறை கொண்ட ஒருவர், அவரது நண்பர்கள், தாய் மாமன், அத்தை மகன், கோயில் திருவிழாவில் வந்த தொழிலாளி ஒருவர், தாய்க்கு அறிமுகமான ஒருவர் உள்ளிட்ட பலர் சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவங்கள் குறித்து சிறுமி தனது தாய் மற்றும் தாத்தாவிடம் கூறியபோதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் போலீசார் இப்போது சிறுமியின் தாய், தாத்தா, திருச்சி தி.மு.க. வட்ட செயலர் ஒருவர் உட்பட மொத்தம் 15 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது சிறுமியின் தாய், தாத்தா, அவரது தம்பி ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் குழந்தைக்கு யார் தந்தை என்பதை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து 10-க்கும் மேற்பட்டோரால் சிறுமி சீரழிக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: எஸ்டிபிஐ-ன் தேர்தல் வியூகம்! பாஜவை தவிர யாருடனும் கூட்டணி பேசத் தயார் - நெல்லை முபாரக் அதிரடி!