இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, 2 நாள் தமிழக பயணத்தின் ஒரு பகுதியாக இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமியை தரிசிக்கிறார். இதனை முன்னிட்டு பக்தர்களின் நுழைவுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று சென்னை வந்த ஜனாதிபதி, அங்கு நிகழ்ச்சிகளை முடித்து கிண்டி ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்தார். இன்று காலை, சென்னையிலிருந்து விமானப்படை சிறப்பு விமானத்தில் திருச்சி வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் நீலக்குடிக்கு புறப்பட்டார். அங்கு மத்திய பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி, ஊக்கமளிக்கும் உரையாற்றுகிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், மாநில அமைச்சர்கள் கோவி.செழியன், கீதாஜீவன் மற்றும் திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இதையும் படிங்க: இங்கிலாந்தில் கால் வைத்ததும் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்... தமிழர்களின் அன்பால் மன உருகிய முதலமைச்சர்...!
விழாவைத் தொடர்ந்து, ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ஹெலிபேடுக்கு வரும் ஜனாதிபதி, அங்கிருந்து காரில் நேராக ரங்கநாதர் கோயிலை அடைகிறார். கோயில் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டு, ஜனாதிபதி கோயிலின் அனைத்து சன்னதிகளையும் சுற்றி தரிசிக்கிறார். அவருக்காக பேட்டரி கார் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதியின் வருகையையொட்டி, கோயில் முழுவதும் சிறப்பாக சுத்தம் செய்யப்பட்டு, அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரங்கா ரங்கா கோபுர நுழைவாயிலில் வரவேற்பு மேடை மற்றும் தற்காலிக அறையும் தயார் நிலையில் உள்ளது.
மாலை 6 மணியளவில் திருச்சியிலிருந்து டெல்லி புறப்படவிருக்கும் ஜனாதிபதியின் பயணத்துக்காக, திருச்சி மற்றும் திருவாரூரில் மொத்தம் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர் செல்லும் இடங்களில் டிரோன் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் பணப்பட்டுவாடா? - பெண் நிர்வாகிகள் செயலால் பரபரப்பு...!