நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாநாளை முதல் துவங்குகிறது. முதல் நிகழ்ச்சியாக 13 ஆவது காய்கறி கண்காட்சி 2.50 டன் காய்கறிகளை கொண்டு கோத்தகிரி நேரு பூங்காவில் துவங்கியது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் சார் ஆட்சியர் சங்கீதா ஆகியோர் திறந்து வைத்தனர்.

கொளுத்தும் கோடை வெயிலுக்கு இதமாக மக்கள் மலைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஆனால் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கடும் இ-பாஸ் நடைமுறைகளை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது. அதன்படி, வார நாட்களில் நான்காயிரம் வாகனங்களும் வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களும் வருவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. இதனிடையே நாளை முதல் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கான கோடை விழா தொடங்கவுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். அவர்களை மகிழ்விக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் கோடை விழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு கோடை விழா இன்று முதல் துவங்குகிறது. புகழ் பெற்ற மலர் கண்காட்சி மே 16 ஆம் தேதி துவங்கி ஆறு நாட்கள் நடைபெறுகிறது. வாசனை திரவிய கண்காட்சி கூடலூர் பகுதிகளில் மே 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ரோஜா கண்காட்சி 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பழக்கண்காட்சி 23 ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: ஊட்டி போறவங்களுக்கு குட் நியூஸ்.. இ-பாஸ் முறையில் திடீர் மாற்றம்..!
கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக 13 ஆவது காய்கறி கண்காட்சி 2.50 டன் காய்கறிகளை கொண்டு கோத்தகிரி நேரு பூங்காவில் இன்று துவங்கியது. இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகளை கவர தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகளால் ஆன ஜல்லிக்கட்டு காளை, மரகத புறா, கிளிகள், சிலம்பம் உள்ளிட்ட உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 18 அரங்குகள் அமைக்கப்பட்டு இதர மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகளில் ஆன புலி, பாண்டா, திருவள்ளுவர் சிலை என கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் சார் ஆட்சியர் சங்கீதா ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதையும் படிங்க: ஆளுநர் கூட்டிய மாநாடு..! ஒட்டுமொத்தமாக புறக்கணித்த பல்கலை. துணை வேந்தர்கள்..!