சென்னை: தமிழக முதல்வர் விஜய் தினசரி நீலாங்கரை இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பின்பற்றிய ‘டியூன் லைன்’ முறையை போலீசார் தற்போது அமல்படுத்தியுள்ளனர். இந்த நடைமுறை மூன்று நாட்களாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல்வர் விஜய் ஒவ்வொரு நாளும் காலையில் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்து செல்கிறார். அவரது பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்படுவதால், கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் திணறிய நிலையில், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
இந்தப் பிரச்சனையை தீர்க்கும் வகையில், முதல்வர் விஜய்யின் உத்தரவின்பேரில் போலீசார் புதிய ஏற்பாட்டை செய்துள்ளனர். நீலாங்கரை முதல் தலைமைச் செயலகம் வரையிலான சாலையின் ஒரு பகுதியில் பிளாஸ்டிக் கூம்புகளை (Traffic Cones) அமைத்து முதல்வரின் கான்வாய்க்கு தனி வழி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜயை பாத்தா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பாத்த மாதிரி இருக்கு! செங்கோட்டையன் நெகிழ்ச்சி!!

இதனால் முதல்வரின் வாகனங்கள் வேகமாக செல்ல முடிகிறது. அதே நேரத்தில், சாலையின் மறுபக்கத்தில் பொதுவாகனங்கள் எந்த இடையூறும் இன்றி இயக்கப்படுகின்றன.
சிக்னல்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படுகிறது. முதல்வர் அந்தப் பகுதியை கடந்ததும் கூம்புகள் உடனடியாக அகற்றப்பட்டு, போக்குவரத்து சகஜமாக்கப்படுகிறது. இந்த முறை முன்பு முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் மெரினா – காமராஜர் சாலையில் அமல்படுத்தப்பட்டது. அந்த வெற்றிகரமான மாதிரியைத் தான் தற்போது முதல்வர் விஜய் பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஏற்பாடு அமலுக்கு வந்த பிறகு, அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறைந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்களும் இந்த முறையை வரவேற்றுள்ளனர். முதல்வரின் அன்றாடப் பயணத்தால் மக்கள் அவதிப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு உதவியாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
முதல்வர் விஜய்யின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக வசதிகளுக்கு இடையில் பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளும் இந்த நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவி ராஜினாமா!! முதல்வர் விஜய் முடிவு!! விரைவில் வருகிறது இடைத்தேர்தல்!