சென்னை: கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக காணப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் காய்ச்சல், உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி, கை கால் மூட்டு வலி போன்ற அறிகுறிகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
பலருக்கு காய்ச்சல் குணமான பிறகும் நான்கு முதல் எட்டு வாரங்கள் வரை வறட்டு இருமல் தொடர்ந்து நீடிப்பதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் உருமாறிய கொரோனா வைரஸ் என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே பல்வேறு உருமாற்றங்களை அடைந்து வருகிறது.
இதையும் படிங்க: வாக்குறுதி என்னாச்சு?.. 13 வருஷமா WAIT பண்ணுறோம்... ஆசிரியர் பணிக்காக காத்திருப்போர் போராட்டம்...!
அவ்வப்போது புதிய வகை வைரஸ்கள் தோன்றி தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சல் அலையும் அத்தகைய உருமாறிய கொரோனா வைரஸால் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் விரிவாக விளக்குகையில், “கொரோனா வைரஸ் இப்போது பருவகால நோய்களில் ஒன்றாக மாறிவிட்டது. சமீப மாதங்களில் பரவிய நோய்களில் கொரோனா காய்ச்சலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆனால், தற்போதைய வைரஸின் வீரியம் மிகவும் குறைந்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமான சிகிச்சை முறைகளை பின்பற்றி மூன்று நாட்களுக்குள் குணமடைந்து விடுகின்றனர்” என்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், “காய்ச்சல் சரியான பிறகு சிலருக்கு இருமல் நீடிப்பது இயல்பானது. இதற்கு முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் எந்த பிரச்னையும் ஏற்படாது. தற்போது பரவி வரும் கொரோனா வகை மக்கள் அச்சப்படும் அளவுக்கு ஆபத்தானது அல்ல.

ஆண்டுதோறும் பருவநிலை மாற்றங்களின்போது இதுபோன்ற காய்ச்சல்கள் வரத்தான் செய்யும். எனவே மக்கள் தேவையின்றி பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை” என்று உறுதியளித்தனர்.
இருப்பினும், நோய் பாதிப்பு அதிகமாக உள்ளதால் மக்கள் முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், கூட்ட நெரிசலான இடங்களை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த காய்ச்சல் அலை தமிழகத்தில் பரவலாக பதிவாகி வருவதால், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் பிரிவு நிரம்பி வழிகிறது. பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிங்க: பாதுகாப்பே இல்ல... கேட் கீப்பர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம்... ரயில்வே ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்...!