சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபாட்டிலுக்கு ₹10 அதிகமாக வசூலிக்கப்படுகிறதா என உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் கூடுதல் தொகை வசூலிக்கும் கடைகளின் விவரங்கள் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மாநிலம் முழுவதும் 4,700க்கும் மேற்பட்ட சில்லரை மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் விற்பனையாளர், உதவி விற்பனையாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 23,629 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். முன்பு தி.மு.க. ஆட்சியில் பாட்டிலுக்கு ₹10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தத் தொகை அப்போதைய அமைச்சருக்கு செல்வதாகவும் புகார் எழுந்தது.
அந்தக் குற்றச்சாட்டை கிண்டல் செய்து, தற்போது முதல்வராக உள்ள விஜய், தேர்தல் பிரசாரத்தில் ‘பாட்டிலுக்கு பத்து ரூபாய்’ என்று பாடல் பாடியிருந்தார். முதல்வரான பிறகு, இந்த முறைகேட்டை ஒழிக்க உத்தரவிட்டார். அதன்படி, கூடுதல் தொகை வசூலிக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் வாழ்வாதார பிரச்சனை! உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

இதையடுத்து, காவல் துறையினர் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இரவு 10 மணிக்குள் கடைகள் மூடப்படுகிறதா, சட்டவிரோத மது விற்பனை நடைபெறுகிறதா என்பதைச் சரிபார்த்து வருகின்றனர். அதேசமயம், ஒவ்வொரு கடையிலும் பாட்டிலுக்கு ₹10 அதிகம் வசூலிக்கப்படுகிறதா என நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் முதல் கட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
போலீசார் கூறுகையில், “₹10 கூடுதல் வசூல் மட்டுமின்றி, டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுகிறதா, உரிமம் பெற்ற குடி மையங்கள் கூடுதல் நேரம் செயல்படுகிறதா என்பதையும் விசாரித்து வருகிறோம்” என்றனர்.
இந்த நடவடிக்கை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் டாஸ்மாக் மீதான புகார்கள் நீண்டகாலமாக இருந்து வரும் நிலையில், முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் நடைபெறும் இந்த விசாரணை, முறைகேடுகளை ஒழிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை முடிவுகளின் அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கள்ளச் சந்தையில் மது... தடுக்க தவறிய திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..! அதிரடி நடவடிக்கை.!!