திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் தரிசன நேரத்தில் திடீர் மாற்றங்களைச் செய்து கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குத் தினமும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
இந்நிலையில், திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரத்தை முறைப்படுத்தும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்பில், "திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கட்டண தரிசன வரிசையில் மாலை 6:30 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதேபோல, பொது தரிசன வரிசையில் இரவு 7:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் வரிசையில் செல்ல அனுமதி அளிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் கோவிலில் கிரில் கேட்..! பக்தர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்... எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு..!

மேலும், தமிழ் மாதப் பிறப்பு, சஷ்டி, கிருத்திகை போன்ற விசேஷ நாட்கள் மற்றும் அரசு பொது விடுமுறை தினங்களில் வழக்கமான இந்தத் தரிசன நேரங்கள் சூழலுக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டது என்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாலை நேரத்தில் தூரத்து ஊர்களிலிருந்து விரைந்து வரும் பக்தர்கள் பலருக்கு இந்த திடீர் நேரக் கட்டுப்பாடு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தரிசன நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை ஆன்மீக அன்பர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பேச்சுரிமைக்கு எதிராக செயல்பட கூடாது! தவெக அரசுக்கு மு.வீரபாண்டியன் எச்சரிக்கை!