தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் 'சமூகநீதி சர்வே' எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கும், அதற்கான பிரத்யேக ஆணையத்தை அமைப்பதற்கும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முறையான ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், "தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மனமார்ந்த வரவேற்புக்குரியது. மாநிலத்தில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் 47 ஆண்டு கால கனவு மற்றும் லட்சியமாகும். தேசிய அளவிலும், மாநில அளவிலும் இத்தகைய கணக்கெடுப்பைச் சாத்தியமாக்குவதற்காக மருத்துவர் அய்யா அவர்களும், அவரது வழிகாட்டுதலில் நானும் எண்ணற்ற களப் போராட்டங்களையும் சட்டரீதியான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கிறோம்.

2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுப் புதிய ஆட்சியமைத்த பின்னர், கடந்த மே 11 அன்று எனது இல்லத்திற்கு நேரில் வந்து சந்தித்த முதலமைச்சர் விஜய் அவர்களிடம், தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காகச் சமூகநீதி சர்வே நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை விரிவாக எடுத்துரைத்தேன்.
இதையும் படிங்க: அதிமுக - பாமகவுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி? பாஜக மெகா ப்ளான்! சூடுபிடிக்கும் தமிழக அரசியல்!
அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 5 அன்று சென்னையில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்களைக் கூட்டி, தமிழ்நாட்டில் முழுமையான சாதிவாரி சமூகநீதி சர்வேயை உடனடியாக நடத்த வேண்டும் என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். தொடர்ந்து ஜூன் 9 அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவுகளை சமர்ப்பித்தோம். அப்போது, 'எங்களின் கொள்கையும் அதுவே' எனக் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நிச்சயம் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சட்டமன்ற ஆளுநர் உரையில் இதற்கான கொள்கை அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு, தற்போது அடுத்தகட்டமாக அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஆணையம் அமைக்கவும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது. 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கான அரசின் பயணம் சரியான திசையில் பயணிப்பதை இந்த முடிவு வெளிப்படுத்துகிறது.
எனவே, சாதிவாரி கணக்கெடுப்பை நெறிப்படுத்துவதற்கான ஆணையத்தின் தலைவராகச் சமூகநீதியில் ஆழ்ந்த அக்கறை கொண்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும். மேலும், இதற்கான அடிப்படை ஆயத்தப் பணிகளை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடித்து, களத்தில் சமூகநீதி சர்வேயைத் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தலைவர் பதவி கிடைக்காததால் பாமக எம்எல்ஏக்கள் பின்வாங்கல்!! அதிருப்திக்கு காரணம் என்ன?