பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி அன்று சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர் வழக்கறிஞராகவும், 2012 முதல் 2024 வரை கட்சியின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார். சம்பவத்தின் போது, ஆம்ஸ்ட்ராங் தனது புதிய வீட்டின் கட்டுமானப் பணியை பார்வையிடச் சென்றிருந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி தப்பியோடியது. படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலைக்கு காரணம் ஆற்காடு சுரேஷ் என்பவருடனான முன் விரோதமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும் கட்சியின் மாவட்டச் செயலருமான தென்னரசு, 2015இல் ஆற்காடு சுரேஷ் தரப்பால் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு குற்றவாளியாக இருந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ரவுடி நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன், பொன்னை பாலு உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து 3 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் 5 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் படுகொலை தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு..!

இந்நிலையில், இந்த வழக்கை செம்பியம் காவல் துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை என கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொது செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய அரசியல் கட்சியினரின் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்து வரும் நிலையில், மாநில காவல்துறை இந்த வழக்கை சுதந்திரமாக விசாரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான முழுமையான நடவடிக்கைகளை போலீசார் எடுக்கவில்லை என்பதால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு நாளை ஒட்டி, ஜூலை 5ஆம் தேதி அவரின் நினைவிடம் அமைந்துள்ள சென்னையை அடுத்த பொத்தூரில் திருவுருவச் சிலை திறக்க காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை வைக்க அனுமதி அளிப்பதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து பொற்கொடி தாக்கல் செய்த மனு திரும்ப பெறப்பட்டது.
இதையும் படிங்க: இவங்களுக்கு கொடுக்க மனசே வராது.. ஏமாற்ற மட்டுமே தெரியும்.. ஆளும் அரசை வறுத்தெடுத்த அன்புமணி..!