2026-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைச் சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 2 கோடியே 22 இலட்சம் குடும்பங்கள் பயன்பெறவுள்ளன. இதற்காக 248 கோடியே 66 இலட்சத்து 17 ஆயிரத்து 959 ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒரு முழு நீளக் கரும்பின் கொள்முதல் விலையை 38 ரூபாயாக உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகள் மூலம் இந்தப் பரிசுப் பொருட்கள் தடையின்றி விநியோகிக்கப்பட உள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வரவிருக்கும் 2026-ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு, தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த விரிவான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 21.12.2025 அன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் உள்ள 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு ஆகியவை வழங்கப்பட வேண்டும் எனத் தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ள ஆணை தெரிவிக்கிறது. இதற்கான மொத்த செலவினமாக சுமார் ₹248.66 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டோல்கேட்டுகளில் இலவசம்; சாலை வரியில் விலக்கு - தனியார் பேருந்து துறையை காக்க முதல்வருக்கு வேண்டுகோள்!
பரிசுத் தொகுப்பில் இடம் பெறும் பொருட்களின் கொள்முதல் விலையைப் பொறுத்தவரை, ஒரு கிலோ பச்சரிசி ₹25-க்கும், ஒரு கிலோ சர்க்கரை ₹48.549 என்ற விலையிலும் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த காலங்களை விடக் கரும்பிற்கான வெட்டுக்கூலி மற்றும் போக்குவரத்துச் செலவுகளைக் கணக்கில் கொண்டு, ஒரு முழு நீளக் கரும்பின் விலையை ₹38-ஆக உயர்த்தி அரசு நிர்ணயித்துள்ளது. கரும்பு கொள்முதலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெற்று விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான நிதி, 2025-26 நிதி ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் நெரிசலைத் தவிர்க்கும் வகையில், உரிய அட்டவணையின்படி விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழர் திருநாளில் ஏழை, எளிய மக்கள் எவ்விதக் குறையுமின்றிப் பொங்கலைக் கொண்டாடத் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்தத் தீவிர நடவடிக்கை, மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொங்கல் பரிசு விநியோகம் குறித்த தேதிகள் மற்றும் டோக்கன் வழங்கும் முறை குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: 1995 & 2002 பேட்ச் அதிகாரிகளுக்குப் புத்தாண்டுப் பரிசு! 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு!