மதுரை: சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அறவழியில் போராடும் இடைநிலை ஆசிரியர்களின் ஆடையை கிழித்து போலீசார் மூலம் அடக்குமுறை கட்டவிழ்த்து விடும் திமுக அரசுக்கு தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரையில் பேரவையின் மாநிலத் தலைவர் ஆரோக்கியதாஸ் இது குறித்து பேசினார்.
ஆரோக்கியதாஸ் கூறுகையில், “திமுக தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் நான்கரை ஆண்டுகளாக அதை நிறைவேற்றவில்லை.
பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பலமுறை போராடியும் பயனில்லை. மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதால் விடுமுறை நாட்களில் அறவழியில் போராட்டம் தொடங்கினர்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு கூச்சமாவே இல்லையா? தேர்தல் அறிக்கை குழு!! பொளந்து கட்டும் அண்ணாமலை!
ஆனால் போலீசாரை ஏவி அடக்குமுறையும் வன்முறையும் கட்டவிழ்த்து விடுகின்றனர். வீடியோவில் ஆசிரியர்களின் ஆடைகளை கிழிக்கும் போலீசாரின் செயல் ஜனநாயக விரோதமானது. இது கடும் கண்டனத்துக்கு உரியது” என்றார்.

மேலும், “2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் வாக்குறுதி கொடுத்தும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை களைய மூவர் குழு அமைத்தது. அது ஏமாற்று நாடகம் என அம்பலமாகியுள்ளது. ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்பு என்ற பெயரில் காலம் கடத்தியது.
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது. தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் ஆசிரியர் சங்கங்களிடையே பாகுபாடு காட்டுகிறார். ஆசிரியர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் குழு அமைத்தும் அரசுக்கு உரிய கருத்துரு வழங்காமல் காலம் தாழ்த்தியது கண்டிக்கத்தக்கது. அடக்குமுறையை கைவிட்டு கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் உடனே நிறைவேற்ற வேண்டும்” என்று ஆரோக்கியதாஸ் வலியுறுத்தினார்.
இந்தப் போராட்டம் தமிழகத்தில் ஆசிரியர்களின் உரிமைகளுக்கான போராட்டமாக விரிவடைந்துள்ளது. திமுக அரசின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுகவினரே திமுகவை தோற்கடிப்பார்கள்!! திருப்பரங்குன்றம் விவகாரம்! பாஜக கடும் விமர்சனம்!