ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) காரணமாக இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகள் ஜூலை 6, 7 ஆகிய தேதிகளுக்கு மாற்றம்; மற்ற கலந்தாய்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் எனத் தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான 2026-27ஆம் கல்வியாண்டின் பொது இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவுகள் ஜூன் 15 முதல் ஜூன் 22 வரை இணையவழியில் நடைபெற உள்ளன. இந்தச் சூழ்நிலையில், வரும் ஜூலை 4-ஆம் தேதி (04.07.2026) அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 (TET Paper I) நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளது.
இந்தத் தகுதித் தேர்வில் தற்பொழுது பணியாற்றி வரும் ஏராளமான இடைநிலை ஆசிரியர்களும் பங்கேற்று எழுத உள்ளனர். இதனால், தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு எவ்விதப் பணிச் சுமையும், பயண இடையூறுகளும் ஏற்படக் கூடாது என்பதைத் தார்மீக அடிப்படையாகக் கொண்டு, ஆசிரியர்களின் நலன் கருதி இந்தத் தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!
அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான 'மாவட்டம் விட்டு மாவட்டம்' மாறுதல் கலந்தாய்வானது, திட்டமிட்டபடி இல்லாமல் தகுதித் தேர்வு முடிந்த பிறகு வரும் ஜூலை 6 மற்றும் ஜூலை 7 (06.07.2026 மற்றும் 07.07.2026) ஆகிய இரண்டு நாட்களில் மட்டுமே பிரத்யேகமாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பொது மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள மற்ற பிரிவினருக்கான (பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள்) அனைத்துக் கலந்தாய்வுகளும் எவ்வித மாற்றமுமின்றி, ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட நாள்காட்டியின்படி திட்டமிட்ட தேதிகளிலேயே முறையாகத் தொடர்ந்து நடைபெறும் என்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் தனது அறிவிப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!