தமிழகச் சட்டமன்றத் பொதுத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையாற்றச் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து முனையம் மக்கள் தலைகளாகக் காட்சியளிப்பதோடு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், சென்னையில் பயிலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் இன்று காலை முதலே கிளாம்பாக்கத்தில் குவியத் தொடங்கினர். வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், பயணிகளின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள் மற்றும் வாடகைக்கு எடுக்கப்பட்ட தனியார் ஒப்பந்தப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
முன்பதிவு செய்தவர்கள் ஒருபுறம் இருக்க, முன்பதிவு செய்யாத ஆயிரக்கணக்கான பயணிகள் நீண்ட வரிசையில் நின்று பேருந்துகளில் ஏறிச் செல்கின்றனர். இது ஒரு பண்டிகை காலக் கூட்டத்தைப் போலக் காட்சியளிக்கிறது.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கிப் புறப்பட்டதால், ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் மற்றும் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் வண்டலூரில் இணைவதால், வண்டலூர் முதல் ஆத்தூர் சுங்கச்சாவடி வரை பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் சுங்கச்சாவடி, மாமண்டூர் பாலாற்றுப் பாலம் மற்றும் புக்கத்துறை ஆகிய இடங்களில் வாகனங்கள் எறும்புகளைப் போல ஊர்ந்து செல்கின்றன.
இதையும் படிங்க: சிங்கப்பூர் டூ திருச்சி!! ஜனநாயக கடமையாற்ற பறந்து வரும் தமிழர்கள்!! விமானம் ஹவுஸ்புல்!
பெரும்பாலான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டதால், ஜி.எஸ்.டி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தப் போதிய போலீஸார் இல்லை. இதன் காரணமாக, வாகனங்கள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றிச் செல்வதால் நள்ளிரவு நேரத்திலும் நெரிசல் குறையாமல் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த தேர்தல்களைக் காட்டிலும் இந்த முறை அதிக வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குச் சான்றாக மக்களின் இந்தப் பிரம்மாண்டப் பயணம் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: வாக்களிக்க செல்லும் மக்களுக்காக 11,323 சிறப்பு பேருந்துகள்! போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு!