தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தனது 2025-ஆம் ஆண்டுக்கான விரிவான செயல்பாட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டை விட கூடுதலாக 9,770 தேர்வர்கள் என மொத்தம் 20,471 பேர் நடப்பாண்டில் பல்வேறு அரசுப் பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுப் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், 11,809 காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், 2026-ஆம் ஆண்டுக்கான ஆண்டுத் திட்டத்தை (Annual Planner) வெளியிட்டுள்ள தேர்வாணையம், வரலாற்றில் முதன்முறையாகத் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-4 ஆகிய முக்கியத் தேர்வுகளை நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமூக நீதிக்கு வலுசேர்க்கும் வகையில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்கள் முறையாக நிரப்பப்பட்டிருப்பதும் இந்த ஆண்டு அறிக்கையின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலாளர் ச. கோபால சுந்தரராஜ் இ.ஆ.ப. இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் மட்டும் 20,471 தேர்வர்கள் அரசுப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்; இது 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 92 சதவீதம் அதிக வளர்ச்சியாகும். வேலைவாய்ப்புகளைத் தேடும் இளைஞர்களுக்காக 11,809 காலிப்பணியிடங்களை நிரப்பத் திட்டமிட்டு, ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டபடி அனைத்து அறிவிக்கைகளும் உரிய கால இடைவெளியில் வெளியிடப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில், 1,007 பட்டியலின மற்றும் பழங்குடியின பின்னடைவு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன; மேலும் 761 இடங்களுக்கான தெரிவுப் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: #BREAKING: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு; 10,583 பேர் தேர்ச்சி!
தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரத் தேர்வாணையம் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, கலந்தாய்வின் போது காலிப்பணியிட விவரங்களைத் தேர்வர்கள் இணையவழியில் நேரலையாக (YouTube) அறிந்துகொள்ளும் வசதி மற்றும் கணினி வழித் தேர்வுகளில் உத்தேச விடைகள் வெளியாகும் போதே தேர்வர்கள் தங்களது விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் வசதி போன்றவை தேர்வர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், அரசுத் துறைகளிடமிருந்து காலிப்பணியிட விவரங்களைப் பெறுவது முதல், தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலம் செலுத்துவது மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI) விண்ணப்பிப்பது வரை அனைத்தும் இப்போது முழுமையாக இணையவழி ஆக்கப்பட்டுள்ளது.
வரும் 2026-ஆம் ஆண்டுக்கான புதிய ஆண்டுத் திட்டத்தைத் தேர்வாணையம் இப்போதே வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பம்சமாக, தேர்வாணைய வரலாற்றில் முதன்முறையாக 2024, 2025 மற்றும் 2026 ஆகிய மூன்று ஆண்டுகளும் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி I, II, IIA மற்றும் IV (Group 1, 2, 2A & 4) பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்படவுள்ளன. இதுதவிர, தொழில்நுட்பப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கும் அறிவிக்கைகள் வரவுள்ளன. புத்தாண்டில் அரசு வேலை பெறத் தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்குத் தேர்வாணையத்தின் இந்த முறையான திட்டமிடல் ஒரு பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க: BREAKING: ஆட்டம் ஆரம்பம்! தவெக-வின் புதிய செய்தித் தொடர்பு நிர்வாகிகள் யார்? விஜய் வெளியிட்ட முக்கியப் பட்டியல்!