தேனி சிறைக் கைதிகள் தப்பியோட்டம் மற்றும் செஞ்சியில் சிறுமி விவகாரம் போன்ற சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காலம் காலமாகத் தொடர்ந்து வரும் பிரச்சினைகள் என்றும், அரசியல் விமர்சனங்களைக் கடந்து குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத் தமிழக அரசு மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலமாக விரைவில் 2,708 பேராசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய தென்மண்டலத்தைச் சேர்ந்த ஆறு மாவட்டங்களின் உயர்கல்வி மேம்பாடு குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், உயர்கல்வித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், தொழில்நுட்பக் கல்வி இயக்கக இயக்குநர் பி. ரத்தினசாமி, மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பெண்கள் பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணை!
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுச் சட்டமன்றத் தொகுதி வாரியாக அடுத்தடுத்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றார். இந்தியாவிலேயே முதன்முதலாக மாணவர்களுக்குக் கல்விக் கடன் பெற்றுத் தரும் இயக்கத்தை 2002-ல் தொடங்கிய மண் மதுரை என்று நினைவுகூர்ந்த அவர், இன்றைக்குப் பொறியியல், கலை மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் சொத்துப் பிணையுமின்றி கல்விக் கடன் பெறும் வகையில் முதல்வர் விஜய் கொண்டுவந்துள்ள பிணையில்லாக் கல்விக் கடன் திட்டம் நாட்டிலேயே எங்கும் இல்லாத வரலாற்றுச் சாதனை என்று பாராட்டினார்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆளுநருடனான முரண்பாடுகளுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு, கன்வீனர் குழுக்கள் மூலம் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சிண்டிகேட் மற்றும் செனட் காலிப் பணியிடங்களை நிரப்பப் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறினார். மேலும், கல்லூரிகளில் காலியாக உள்ள 6,000 பேராசிரியர் பணியிடங்களில், முதற்கட்டமாக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வாயிலாக 2,708 பேராசிரியர்கள் மிக விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றும் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றும், இதில் எவ்வித பாரபட்சமும் இருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதை உணர்ந்துள்ளதாகவும், பண்டிகைக் காலங்களில் மக்கள் பாதிக்கப்படாத வகையில் விலையைக் கட்டுப்படுத்த அரசு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு நிலவரம், தேனி சிறைக் கைதிகள் தப்பியோட்டம் மற்றும் செஞ்சி சிறுமி விவகாரம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், இதுபோன்ற சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காலம் காலமாகத் தொடர்ந்து வருவதாகக் கூறினார். குழந்தைகள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப்படுவதை மனிதாபிமானம் உள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இத்தகைய குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் புதிய மாநிலத் தலைமை மாற்றத்தால் ஆளும் கூட்டணியில் எந்தப் பிளவும் இல்லை என்றும், முதல்வருடன் நல்ல புரிதலுடன் காங்கிரஸ், விசிக மற்றும் தவெக இணைந்து ஒற்றுமையாகப் பணியாற்றி வருவதாகவும் கூறினார். இடைத்தேர்தலில் கூட்டணிகள் இன்றி திமுக இரண்டாவது இடத்தைப் பிடித்தது குறித்த கேள்விக்கு, திமுக என்பது முற்றிலும் தோல்வியடைந்த கட்சி என்றும், தோற்றுப்போன அந்தக் கட்சியைப் பற்றிப் பேச விரும்பவில்லை என்றும் சாடிய அமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து வெற்றிப் பாதையில் புதிய அத்தியாயத்தைப் படைத்து வருவதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எப்ஐஆரில் பெயரே இல்லாதவருக்கு 6 ஆண்டு சிறை: உ.பி. போலீசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!