கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்பட்டார்.
செங்கோட்டையனின் அதிருப்தி குறித்த பேச்சு, 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பாணி மற்றும் கட்சி உள்ளூர் மாவட்ட அரசியலில் அவரது ஆதரவு முடிவு. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணனுக்கு எடப்பாடி ஆதரவு அளித்ததாகக் கூறப்படுவது, இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இதற்கிடையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் மரியாதை செலுத்துவதற்காக ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் சென்ற நிலையில், சசிகலாவையும் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினார். அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைப்பேன் என்று கூறி வந்த செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார். தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ள நிலையில் பதவி கூட ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு விரோதி ஸ்டாலின்… இப்படிப்பட்ட முதல்வரை பார்த்ததே இல்ல… விளாசிய இபிஎஸ்…!
இருப்பினும் அதிமுகவிலிருந்து அதிருப்தி ஏற்பட்டு விலகியவர்கள் திமுகவில் சமீபத்தில் இணைந்து வருவதை பார்த்து வருகிறோம். அதிமுகவில் இருந்து விலகி வந்தவர்களுக்கு அரணாக திமுக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் செங்கோட்டையனும் திமுகவில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் ராஜினாமா கடிதம் கொடுத்த செங்கோட்டையனிடம் அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. செங்கோட்டையனை திமுகவில் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் மூன்று மாத காலமாகவே திமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. பழம்பெரும் அரசியல்வாதி என பெயரெடுத்த செங்கோட்டையன் எந்த பக்கம் செல்வார் என்றும் திமுகவா? தவெகவா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: போராட விட்டுட்டீங்களே! நீலி கண்ணீர் வடித்த பச்சை துரோகிகள் எங்கே? இபிஎஸ்- ஐ புரட்டி எடுத்த முதல்வர்...!