அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக அரசின் மீது கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் நேரடி வாக்குமூலம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டி அவர் பேசியுள்ளார். ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில் 5 கோடி ரூபாய் பேரம் பேசப்படுவதாகவும், அரசு பொறுப்பில் இருப்பது இடைத்தரகர் பணியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி மூலம் இந்தப் பேரம் நடைபெற்றதாக அமைச்சரே வாக்குமூலம் அளித்திருப்பதாக தினகரன் குறிப்பிட்டார்.உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே டஃப் கொடுக்கும் அதிசயங்களும் ஆச்சரியங்களும் கலந்த தவெக ஆட்சியில், அரசுப் பதவிக்கு 5 கோடி ரூபாய் வரை பேரம் பேசுவதற்கும் இடைத்தரகர் வேலை பார்ப்பதற்கும்தான் லயோலா மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பதவி வழங்கப்பட்டதோ என்ற கேள்வி பலரின் மத்தியில் ஒலிக்கத் தொடங்கியிருப்பதாக அவர் கூறினார்.
இந்தப் பேரம் குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததன் பின்னணி என்ன என பொதுமக்கள் மத்தியில் எழும் விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களுக்கு உள்ளது என்று தினகரன் வலியுறுத்தினார். ஒரு கோப்பைத் திறந்ததற்கே திமுக முன்னாள் அமைச்சர் சிறையில் இருக்கிறார். அடுத்தடுத்த கோப்புகளைத் திறந்தால் என்னவெல்லாம் ஆகுமோ என பில்டப்பிலேயே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு, லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லையா என்று அவர் கேட்டார்.
இதையும் படிங்க: சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பதா.? மீனாட்சியம்மன் கோவிலில் மின்வெட்டு.! வெளுத்து வாங்கிய TTV தினகரன்.!

அப்படி இருந்திருந்தால், லஞ்சம் வாங்கியதாகச் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சருடன், லஞ்சம் கொடுத்ததாகச் சட்டமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்த இந்நாள் நிதியமைச்சரும் சிறையில்தானே இருந்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களில் எதிர்க்கட்சியினர் என்றால் கைது நடவடிக்கை; இடைத்தரகர் வேலை பார்த்தாலும் அவர் சொந்தக் கட்சியினராக இருந்தால் சலுகை என்ற திமுக அரசின் இரட்டை வேடத்தைப் பார்க்கும்போது, “உனக்கு வந்தால் ரத்தம்; எனக்கு வந்தால் தக்காளிச் சட்னியா?” என்ற நகைச்சுவைக் காட்சிகளைத்தான் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது என்று தினகரன் கூறினார்.
எனவே, இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் பேரம் பேசியது யார் என்ற விவரத்தை வெளிப்படையாக வெளியிட்டு, அது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, இடைத்தரகர் வேலை பார்த்த தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி மீதும், இந்தப் பேர விவரத்தை இதுநாள் வரை மறைத்த பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜயை தினகரன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தகனம் செய்ய ஜெனரேட்டரோடு வரணுமா.! வெட்கக்கேடு.! டிடிவி தினகரன் காட்டம்.!!