புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குடும்பப் பிரச்சனை காரணமாக கணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி நாடகமாடிய மனைவியை தடயவியல் மற்றும் உடற்கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில் மழையூர் காவல்துறையினர் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே உள்ள கீழவாண்டான்விடுதியைச் சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (33). இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகியாகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரண்யா (34). கறம்பக்குடி அருகே உள்ள மணமடை பகுதியைச் சேர்ந்த தங்கராசு - தாமரைச்செல்வி தம்பதியின் மகளான சரண்யாவிற்கும் சூரியபிரகாஷிற்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி இரவு கணவன் - மனைவி இடையே குடும்பப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவு சுமார் 10:50 மணியளவில் சூரியபிரகாஷ் வீட்டின் உத்தர மரக்கட்டையில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மனைவி சரண்யா மழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சரண்யா கொடுத்த புகாரின் பேரில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி காலை மழையூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இதையும் படிங்க: அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??
சூரியபிரகாஷின் உடற்கூறாய்வு அறிக்கை தடய அறிவியல் ஆய்வக அறிக்கை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண்யா அளித்த ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் இது தற்கொலை அல்ல திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த மழையூர் காவல்துறையினர் கணவனைக் கொலை செய்த குற்றத்திற்காக மனைவி சரண்யாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சரண்யா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். த.வெ.க நிர்வாகி தற்கொலை என நம்பப்பட்ட சம்பவம் தற்போது கொலை வழக்காக மாறியிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வராத கரெண்டுக்கு "TWO PHASE" விளக்கம்..! அமைச்சரின் ஜெனரேட்டர் கதை... கிண்டலடித்த செந்தில் பாலாஜி..!!