அதிமுகவிலிருந்து 6 சட்டமன்ற உறுப்பினர்களைக் கையில் இட்ட மை காய்வதற்குள் குதிரை பேரம் மூலமாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இழுத்தவர்கள் தவெக அமைச்சர்கள்தான் என்பது நாடறிந்த உண்மை என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடுமையான குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார்.
தமிழகச் சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அரசியல் களம் மற்றும் அவையின் போக்க குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அதிமுகவிலிருந்து 6 சட்டமன்ற உறுப்பினர்களை, அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு கையில் இட்ட மை காய்வதற்குள் குதிரை பேரம் மூலம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இழுத்தவர்கள் தவெக-வைச் சேர்ந்த அமைச்சர்கள்தான் என்பது நாடறிந்த உண்மை. இந்த விவகாரத்தை தொகுதி மக்களும் அறிவார்கள், நாங்களும் அறிவோம், ஏன் இந்தச் சட்டப்பேரவையும் நன்றாக அறியும்.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்! கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேட்டி!

சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசப்பட்ட கருத்துகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என பேரவைத் தலைவரிடம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம். அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாகப் பேரவைத் தலைவரும் உறுதி அளித்துள்ளதால், அது குறித்து மீண்டும் அவைக்கு வெளியே பேசுவது முறையாக இருக்காது எனத் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக டெல்லி ஆட்சிக்குச் சரணடைந்து விட்டதாக வைக்கப்படும் விமர்சனம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த முதுகெலும்புமிக்கத் தலைவராகத் தமிழகத்தில் பரிணாமம் பெற்று, அதிமுகவை மிகவும் திறம்பட வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார் எனக் கூறினார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எனத் தனித்துவமான கொள்கைகள் உள்ளன. எந்தவொரு முடிவை எடுத்தாலும் தமிழக மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிசாமி முடிவுகளை எடுப்பார். அதிமுக யாருக்கும் அடிபணியாத கம்பீரமான இயக்கம்; எங்கள் பொதுச்செயலாளர் தொண்டர்களையும் இந்த இயக்கத்தையும் முழுமையாகக் காப்பாற்றும் முதன்மைத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார் என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி! 'வெற்றி 150' திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் ஆனந்த் அறிவிப்பு!