தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் பொறுப்பு மிக்க அரசியல் பேரியக்கம் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும் என தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் அறிவுரை வழங்கி உள்ளது. கட்சியின் தலைவர் விஜய் மீது நீங்கள் கொண்டிருக்கும் எல்லையில்லா அன்பினால் பெருமகழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஜயின் மக்கள் சந்திப்புச் சுற்றுப் பயணத்தின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம் என்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், வாகனங்கள், கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கண்டிப்பாக உயரமான இடங்களில் மேலே ஏறக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுப்பயணத்தின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும். வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடப்பாவிகளா? தவெக கட்சிக்கொடியில் திடீர் கலர் மாற்றம்... விஜய்க்கு பேரதிர்ச்சி கொடுத்த நாகை நிர்வாகிகள்...!
மேலும், வாகனங்களை நிறுத்தும் பொழுது பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும் என்றும் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக, கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது எனவும் பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்., நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது என்றும் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் அரசியலுக்கு வரணும்னு சொன்னேன்தான்! அதுக்காக இப்படியா? சீமான் பரபரப்பு பிரஸ்மிட்...!