தமிழக அரசியலில் புதிய அலை என்று கூறப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் பிரவேசம் சூடு பிடித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். கடந்த 13ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் காண அலைக்கடலென தொண்டர்கள் குவிந்தனர். விஜய்யிடம் அருகில் வராதவாறு தடுப்பதற்கு எப்போதும் பவுன்சர்கள் இருப்பார்கள். அவருக்கு முழு பாதுகாப்பு எப்போதும் அளிக்கப்படும்.
இதனிடையே, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வீட்டிற்குள் இளைஞர் ஒருவர் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பலத்த பாதுகாப்பு இருந்தும் விஜயின் வீட்டிற்குள் எப்படி அந்த இளைஞர் நுழைந்தார் என்ற கேள்வி எழுந்தது. விஜய்யின் நீலாங்கரை வீட்டின் மொட்டை மாடியில் நேற்று முன் தினமே வீட்டுக்குள் நுழைந்த நபர் நேற்று ஒரு நாள் முழுவதும் மாடியின் மீது இருந்ததாக கூறப்பட்டது. நேற்று மாலை நடைபயிற்சிக்காக மொட்டை மாடிக்குச் சென்ற விஜய் இளைஞர் ஒருவர் இருப்பதை கவனித்துள்ளார். இளைஞரிடம் பொறுமையாகப் பேசி விஜய் அவரை தரை தளத்திற்கு அழைத்து வந்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

இளைஞர் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டதால் விஜய் அந்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியானது. நீலாங்கரை போலீசாருக்குத் தகவல் தெரிவித்து அந்த இளைஞரை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க: பரப்புரைக்கு அனுமதி வேணுமா? ஏதாச்சு நடந்தா யார் பொறுப்பு? விஜய்க்கு கோர்ட் சரமாரி கேள்வி…
விஜய்யைப் பார்ப்பதற்காக நேற்று பகல் முழுவதும் மாடியின் மீது உணவின்றி இளைஞர் பதுங்கி இருந்துள்ளார் என்றும் விஜயின் தீவிர ரசிகரான அந்த இளைஞர், அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வீட்டுக்குள் நுழைந்ததாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், அத்துமீறி இளைஞர் விஜய் வீட்டிற்குள் வந்த சூழலில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். எதற்காக அந்த நபர் உள்ளே வந்தார்., அசம்பாவிதம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: விஜயை எதிர்த்தால் திமுக கைக்கூலி! திமுகவை எதிர்த்தால் பாஜக கைக்கூலி... என்னயா உங்க நியாயம்? - சீமான்