தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தனது கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரப் பாடலை இன்று வெளியிட்டுள்ளார். உங்க விஜய் நான் வரேன்! விசில் அடிக்க ரெடியா? என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இது விஜய்யின் அரசியல் வருகைக்காகக் காத்திருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே எக்ஸ் (X), இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. தவெக-விற்குத் தேர்தல் ஆணையம் 'விசில்' (Whistle) சின்னத்தை ஒதுக்கியுள்ள நிலையில், பாடலில் இடம்பெற்றுள்ள "விசில் அடிக்க ரெடியா? என்ற வரிகள் நேரடியாகத் தேர்தல் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தவெக-விற்கு இந்தப் பாடல் ஒரு மிகச்சிறந்த பிரசாரக் கருவியாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சியில் விஜய்! நாளை எம்.ஜி.ஆர் சிலை அருகே பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரம்!

ஏற்கனவே கட்சியின் கொடிப் பாடலை (Flag Anthem) விவேக் எழுத, தமன் இசையமைத்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தேர்தல் பிரசாரப் பாடலும் அதேபோன்ற ஒரு மாஸ் (Mass) உணர்வை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நாளை (ஏப்ரல் 2) திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் தனது பிரம்மாண்டப் பிரசாரத்தைத் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்தப் பாடல் வெளியானது தவெக தொண்டர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதையும் படிங்க: அயனாவரம் தவெக கூட்டத்தில் மது பாட்டில் வீச்சு! மேடையிலேயே அமர்ந்து ஆதவ் அர்ஜுனா போராட்டம்!