முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” இன்று முதல் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ரேஷன் பொருட்கள் மக்களின் வீடுகளுக்கு அருகிலேயே சென்றடையும் வகையில் நவீன வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்கு பயன்படுத்தப்படும். இதனால், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நியாய விலைக் கடைகளுக்கு நேரில் செல்ல தேவையில்லை.
இதையும் படிங்க: 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' கேப்டனுடைய கனவு திட்டம்.. பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்..!!
சென்னை தண்டையார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். மேலும் இது திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலன் சார்ந்த மற்றொரு மைல்கல் என குறிப்பிட்ட அவர், கொருக்குப்பேட்டையில் மாற்றுத்திறனாளி வீட்டிற்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வழங்கும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்து, வயது முதிர்ந்த பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்.
இத்திட்டத்தின் கீழ் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் செயல்பட்டு வரும் 36 நியாய விலைக் கடைகளுக்குட்பட்ட 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட 2,467 குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள 3,548 குடும்ப உறுப்பினர்களின் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாடு அரசு மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தத் திட்டம், குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு ரேஷன் பொருட்களைப் பெறுவதற்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும். தொகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு இது பெரிதும் உதவும்," என்றார். மேலும், இத்திட்டம் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: கபில்தேவின் பயணம் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு உத்வேகம்.. புகழ்ந்து தள்ளிய உதயநிதி..!!