தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஐபி தரிசனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடமே பணம் கேட்ட அர்ச்சகர்களின் செயலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மாஸ்க் அணிந்து ஆய்விற்காக சென்ற போது அமைச்சர் என தெரியாமல் பணம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சாதாரணமாக டி-ஷர்ட் அணிந்து சென்ற அமைச்சரிடம் நான்காயிரம் ரூபாய் தந்தால் விஐபி தரிசனத்தில் அழைத்துச் செல்வதாக அர்ச்சகர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அர்ச்சகர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை ஆய்வுப் பணிக்காக சென்ற இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷிடம் அமைச்சர் என்று தெரியாமல் விரைவு தரிசனம் செய்ய அங்குள்ள அர்ச்சகர் ஒருவர் ரூ.4000 கேட்டதாக வெளியான செய்தி கோவில் நிர்வாகத்தின் முகத்திரையை கிழித்துள்ளது என முன்னாள் MLA வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கையில் பணம் இல்லை என்றால் ஆன்லைன் முறையில் கூட கொடுங்கள் என்றும் கேட்பதாக கூறப்படுவது எந்த அளவிற்கு அங்கு லஞ்சம் புரையோடிப் போயிருப்பதை காட்டுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார். கடந்த வாரம் கூட திருச்செந்தூர் கோவிலில் நடக்கும் லஞ்சம் மற்றும் கட்டணக் கொள்ளை குறித்து நான் பதிவு செய்திருந்த நிலையில், அதனை மெய்பிக்கும் விதமாக இன்று அமைச்சரிடமே லஞ்சம் கேட்ட செய்தி அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: கரூர் பாஜக அலுவலகம் முன்பு முன்னாள் பெண் நிர்வாகி கதறல்... கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு... காரணம் என்ன?
திருச்செந்தூரில் மட்டுமல்ல தமிழகத்தின் பல முக்கிய கோவில்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருவதை செய்திகள் உறுதிபடுத்திக் கொண்டிருக்கிறது என்றும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். இனிமேலாவது கோவில்களில் பக்தர்கள் மன நிம்மதியுடன் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இதுபோன்ற முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க இந்துசமய அறநிலையத் துறையை வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: காதுல பூ சுத்துரீங்களா? ஆதவ் பேச்சு ஆச்சரியமா இருக்கு..! தமிழிசை விமர்சனம்..!