அதிமுகவை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்த நிர்வாகிகளுக்கு ஆசை வார்த்தைகளை வீசித் தனது காலடியில் வீழ்த்த நினைக்கும் முதலமைச்சர் விஜய்க்கு மிக விரைவில் அரசியல் ரீதியாகப் பேரிடி காத்திருக்கிறது என்றும், அதிமுகவை ஏன் தொட்டோம் என்று விஜய் கதறி அழும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்ட அனலை எட்டியுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற தவெக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெக வேட்பாளர் மேடையில் கண்ணீர் விட்டு அழுத விவகாரம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் கடுமையான கண்டனம் தெரிவித்து ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தவெகவின் கபட நாடகங்களையும் முதலமைச்சர் விஜய்யின் அரசியல் நகர்வுகளையும் அக்குவேறு ஆணிவேறாகத் தோலுரித்துள்ளார்.
தாராபுரத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய்யும், அதிமுகவிற்குத் துரோகம் செய்துவிட்டுத் தவெகவில் தஞ்சம் புகுந்துள்ள வேட்பாளரும் ரீல்ஸ் மோகத்திற்குத் தாராபுரம் மக்களை அடிமையாக்க ஒரு நீலிக்கண்ணீர் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்று அவர் சாடினார்.
இதையும் படிங்க: குதிரை பேரம்... அரசியல் அநாகரிகத்தை எப்படி ஏற்க முடியும்.? ஆர். பி. உதயகுமார் கேள்வி.!!
வாக்களித்த மக்களுக்கும், இரவு பகலாக உழைத்த தொண்டர்களுக்கும், வாய்ப்பளித்த தலைமைக்கும் வெற்றி பெற்ற பத்தே நாட்களில் பச்சைத் துரோகம் செய்ததை இன்றைக்குத் தாராபுரம் தொகுதி வாக்காளர்கள் துளியும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது கள நிலவரத்தில் வெட்டவெளிச்சமாகிவிட்டது என்று அவர் தெரிவித்தார். அந்தப் பச்சைத் துரோகத்தை மூடி மறைத்துத் திசைதிருப்பவே இந்த அழுகை நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாகவும், அதற்கு முதலமைச்சர் ஆறுதல் கூறுவது போல் நடித்து அந்தத் துரோகத்திற்குத் துணைபோய்த் தன்னை ஒரு நிரபராதியாகக் காட்டிக்கொள்ளப் பார்க்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

அதிமுகவிலிருந்து தவெகவிற்குச் சென்ற நிர்வாகிகளை விமர்சித்த அவர், நடிகராக விஜய் வீசிய வலையில் சிக்காதவர்கள் எல்லாம் இப்போது முதலமைச்சராக அவர் வீசும் பதவி ஆசை வலைக்குள் சிக்குகிறார்கள்; எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் அடையாளம் காட்டப்பட்டு அதிகாரத்தை ருசித்த இவர்கள் அனைவரும் இன்றைக்கு அதிமுகவில் காலாவதியான தலைவர்கள்; காலாவதியான உணவுப் பொருளை உட்கொண்டால் உடலுக்கு உபாதை ஏற்படுவது போல, இந்தக் காலாவதியான நபர்களைச் சேர்த்துள்ள தவெகவிற்கும் விரைவில் அரசியல் உபாதை ஏற்படும் என்று எச்சரித்தார்.
சில நிர்வாகிகளை வளைத்துப் போட்டுவிட்டு அதிமுகவை அல்லுசில்லு, மற்றும் பலர், தூர்ந்து போன கட்சி என்றெல்லாம் ஆணவத்தோடு விமர்சித்த விஜய்யின் நரித்தனத்தைப் புரிந்து கொள்ளாமல் சிலர் அங்குத் தஞ்சம் புகுந்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார். அரசியல் காற்று எப்போதும் ஒரே திசையில் வீசாது என்பதை விஜய் நினைவில் கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டிய அவர், காற்றின் திசை மாறும்போது, ரீல்ஸ் மோகத்தால் கட்டமைக்கப்பட்ட விஜய்யின் உண்மையான முகமூடி கிழிந்து தொங்கும்; அப்போது மக்களின் உண்மையான தீர்ப்பு வெளிவரும் என்றார்.
அதிமுகவின் பலத்தை அழுத்தமாகப் பதிவு செய்த அவர், "அதிமுக ஒன்றும் தண்ணீரில் போட்டால் கரைந்துபோகும் உப்போ அல்லது சர்க்கரை கரைசலோ அல்ல; இது தமிழக மக்களுக்குக் கிடைத்த தங்கப் புதையல்; ஓராயிரம் விஜய் வந்தாலும் இந்த தங்கப் புதையலை ஒருபோதும் அசைக்க முடியாது; எதிரிகளுக்கு இரும்பாகவும், தொண்டர்களுக்குத் தங்கமாகவும், மக்களுக்கு வைரமாகவும் ஜொலிக்கும் பேரியக்கம் அதிமுக" என்று முழங்கினார்.
மேலும், சத்தியத்தாலும் சேவையாலும் உருவான அதிமுகவை அதிர்ஷ்டத்தாலும் ரீல்ஸ் மோகத்தாலும் விபத்தில் ஆட்சிக்கு வந்த விஜய் அல்ல, அவரது அப்பன், பாட்டன் யார் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது; கட்சியின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை இந்த இயக்கம் அசைக்க முடியாத எஃகு கோட்டையாகத் திகழும் என்று ஆவேசப்பட்டார்.
இறுதியாக, இப்போது தவெகவில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஓடுகாலிகள் எல்லாம் தேர்தல் முடிவுக்குப் பின் நாலாபுறமும் சிதறி ஓடுவார்கள்; அப்போது அதிமுகவை ஏன் தொட்டோம் என எண்ணி விஜய் கதறும் காலம் வரும்; எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவிற்கு நல்ல காலத்தை நிச்சயம் பெற்றுத் தரும் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குதிரை பேரம் பேசிய 'அந்த 2 பேர் யார்? முதலமைச்சருக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!