புரசை வி.எஸ். பாபு என்பவர் தமிழக அரசியலில் நீண்டகாலமாக அறியப்பட்ட ஒரு மூத்த தலைவராவார். வடசென்னை பகுதியைச் சேர்ந்த இவர், முன்பு திமுகவில் இருந்து புரசைவாக்கம் தொகுதியில் எம்எல்ஏவாக பதவி வகித்தவர். அக்காலத்தில் வடசென்னை மாவட்ட அளவில் திமுகவின் முக்கிய பொறுப்புகளையும் வகித்திருந்தார். பின்னர் கட்சி மாற்றம் செய்து அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் சேர்ந்த பிறகு அவருக்கு படிப்படியாக பொறுப்புகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக 2022-ஆம் ஆண்டு அதிமுக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டபோது, வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். இது அவரது அரசியல் பயணத்தில் முக்கியமான திருப்பமாக இருந்தது, ஏனெனில் வடசென்னை போன்ற நகர்ப்புற தொகுதிகளில் அதிமுகவுக்கு வலுவான அடித்தளம் அமைப்பது எப்போதும் சவாலானதாகவே இருந்து வந்துள்ளது.
ஆனால் 2025 ஜூன் மாதத்தில் அதிமுகவில் ஒரு அதிரடி மாற்றம் நிகழ்ந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பின்படி, வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து புரசை வி.எஸ். பாபு நீக்கப்பட்டார். இதே சமயத்தில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளரும் மாற்றப்பட்டார். இந்த நீக்கத்திற்கு காரணமாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுவது, பூத் கமிட்டிகளை முறையாக அமைக்காதது, தேர்தல் சார்ந்த பணிகளை திறம்பட மேற்கொள்ளாதது போன்றவையாகும்.
இதையும் படிங்க: சாமானியருக்கும் அதிகாரம்... நலத்திட்ட நாயகன்..! எம்ஜிஆருக்கு புகழாரம் சூட்டிய விஜய்..!
அதாவது, கட்சி அமைப்பு வலுப்படுத்துதல் மற்றும் தேர்தல் தயாரிப்புகளில் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு செயல்படவில்லை என்பது தலைமையின் கருத்தாக இருந்தது. இதனால் அவர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் வி.எஸ். பாபு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த வெங்கடேஷ் பாபு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக V.S. பாபு நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையில் V.S. பாபுவும் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக திருமங்கலம் மோகன் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் பரவுகின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக வெற்றி கழகத்தின் தரப்பில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கையெழுத்து போடச் சொல்லி போலீஸ் மிரட்டுனாங்க!! சிபிஐயிடம் விஜய் கொடுத்த ஆதாரம்!! தவெகவினர் தகவல்!