நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 பணியிடங்களை நிரப்ப 634 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் திரு. கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிரடியாக வழக்குப் பதிவு செய்திருந்த செய்தி நேற்று கோட்டை வட்டாரத்தில் மாபெரும் புயலைக் கிளப்பியிருந்தது. இந்நிலையில், இந்த எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவுக்கு எதிராகக் கே.என். நேரு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கினை விசாரித்த மாண்புமிகு தலைமை நீதிபதி அமர்வு, தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த அவசர வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக தற்பொழுது விசாரணைக்கு வந்தது. அப்போது நேரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் அடுத்த விசாரணை வரும் வரை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று முந்தைய (திமுக) அரசு நீதிமன்றத்தில் முறைப்படி உறுதிமொழி (Assurance) அளித்திருந்தது. அப்படி இருக்கையில், நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட அந்தத் தார்மீக உறுதிமொழியை அப்பட்டமாக மீறி, தற்பொழுது திடீரென அவர் மீது எஃப்ஐஆர் பதியப்பட்டது எப்படி? அந்த உறுதிமொழி தற்பொழுது என்ன ஆனது? என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் கேள்விகளை எழுப்பினார்.

தலைமை நீதிபதியின் இந்த அடுக்கடுக்கான கேள்விகளுக்குத் தற்போதைய தமிழக வெற்றிக் கழக (TVK) அரசின் தலைமை வழக்கறிஞர் (Advocate General) கோர்ட்டில் மிகவும் அதிரடியான மற்றும் அலாதியான பதில் வாதத்தை முன்வைத்தார். அவர் பேசுகையில், மாண்புமிகு நீதிபதி அவர்களே, அது முந்தைய ஆட்சியில் முந்தைய தலைமை வழக்கறிஞர் அளித்த உறுதிமொழி. சட்ட ரீதியாகப் பார்க்கும் போது, முந்தைய தலைமை வழக்கறிஞரின் அந்த தற்காலிக உறுதிமொழி தற்போதைய அரையோ அல்லது தற்போதைய தலைமை வழக்கறிஞரையோ எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்று வாதிட்டு ஒட்டுமொத்த நீதிமன்றத்தையும் சுறுசுறுப்பாக்கினார்.
இதையும் படிங்க: அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி!
இருதரப்பு காரசார வாதங்களையும் தீர்க்கமாகக் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் தற்காலிக இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, நகராட்சி நிர்வாக ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது வரும் ஜூன் 23-ஆம் தேதி வரை எவ்விதமான அடுத்தகட்ட மேல் நடவடிக்கைகளையும் (No Coercive Action) தற்போதைய தமிழக அரசு எடுக்கக் கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
இதையும் படிங்க: ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு! விலங்குகள் பலியிட தடை விதித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு அதிரடி!