தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான கைது நடவடிக்கைகள் மற்றும் சோதனை குறித்த கேள்விக்கு, மறைந்த தலைவர் கேப்டன் விஜயகாந்த் அடிக்கடி கூறுவது போல, "உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும்" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த செங்குன்றத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், மின்தடைப் பிரச்சனை, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வு குறித்து விரிவாகப் பேசினார்.
எதிர்க்கட்சியினர் மீதான வழக்குகள் மற்றும் சோதனைகள் குறித்துப் பேசிய அவர், "ஊழல் என்ற ஒன்று நடந்திருந்தால், அதனை நீதிமன்ற வழக்கு விசாரணையில் உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும். மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது" என்றார்.
இதையும் படிங்க: அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தொடர்ந்து தமிழகத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்துப் பேசிய அவர், "தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுப் பிரச்சனை நீடித்து வருகிறது. இன்று காலையில் இருந்து மட்டுமே 10 முறைக்கு மேல் மின்தடை ஏற்பட்டுள்ளது" என்று பேசிக்கொண்டிருந்த போதே அங்கு திடீரென மின்வெட்டு ஏற்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

சட்டம்-ஒழுங்கு நிலை குறித்துக் கவலை தெரிவித்த பிரேமலதா, "குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன; தேனி கிளைச் சிறையில் இருந்து ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாகப் புகழ்பெற்ற தமிழ்நாடு காவல்துறை இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை?
ஆவின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விண்ணைத் தொடும் விலை உயர்வை அரசு உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஏழை, எளிய நடுத்தர மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி விலை உள்ளிட்ட அனைத்து மளிகைப் பொருட்களின் விலைவாசி உயர்வையும் தமிழக அரசு உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். காணாமல் போன குழந்தைகளைப் போர்க்கால அடிப்படையில் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். விளம்பரங்களை விடுத்து மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனைகளில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மானிய கோரிக்கை விவாதங்கள் வெறும் அறிக்கைதான்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!