இந்தியாவின் புகழ்பெற்ற மல்யுத்த வீரரான சுஷில் குமார், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். 2010 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் பெற்று, உலக அளவில் முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார். 66 கிலோ தன்னியல்பு-முறை மல்யுத்தத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய இவர், 2014 மற்றும் 2018 காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கப் பதக்கங்களையும் வென்றார். இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது 2009இல் இவருக்கு வழங்கப்பட்டது.

எனினும், சுஷில் குமாரின் வாழ்க்கை சர்ச்சைகளால் பாதிக்கப்பட்டது. 2021ம் ஆண்டு மே 4-ம் தேதி, டெல்லியில் உள்ள சத்ரசால் ஸ்டேடியத்தில் நடந்த மோதலில், ஜூனியர் மல்யுத்த வீரர் சாகர் தன்கர் (ராணா) படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த வழக்கில் சுஷில் குமார் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். சுஷில் குமாருக்கும், சாகருக்கும் முன்விரோதம் இருந்ததாகவும், சுஷிலின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் சாகர் வாடகைக்கு இருந்ததால் ஏற்பட்ட பிரச்சினையே இந்தக் கொலைக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சட்டவிரோத சூதாட்ட ஆப் வழக்கு.. டெல்லியில் உள்ள ED அலுவலகத்தில் சுரேஷ் ரெய்னா ஆஜர்..!!
சாகரை சுஷில் மற்றும் அவரது கூட்டாளிகள் கடத்தி, ஹாக்கி ஸ்டிக்கால் தாக்கியதாக சிசிடிவி காட்சிகள் உறுதிப்படுத்தின. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சாகர், மருத்துவமனையில் உயிரிழந்தார். வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர், சுஷில் தலைமறைவாகி, ஹரித்வாரில் யோகா ஆசிரமத்தில் பதுங்கியிருந்தார். இதனையடுத்து 2021ம் ஆண்டு மே 23ம் தேதி டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில், சாகரை தாக்கிய வீடியோவை வைரலாக்கி தனது ஆதிக்கத்தை நிரூபிக்க விரும்பியதாக சுஷில் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் இந்த வழக்கில், இன்று உச்சநீதிமன்றம் சுஷிலின் ஜாமீனை ரத்து செய்து, ஒரு வாரத்தில் சரணடைய உத்தரவிட்டது. டெல்லி உயர்நீதிமன்றம் முன்னர் சுஷிலுக்கு ஜாமின் வழங்கியிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அதனை ரத்து செய்து, வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது. கொலை, கலவரம் மற்றும் குற்றச் சதி ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சுஷில், மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார். இந்த வழக்கு இந்திய விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காஸ்ட்லி வைர மோதிரத்துடன் ப்ரபோஸ்.. கால்பந்து ஜாம்பவானுக்கு விரைவில் டும்.. டும்.. டும்..!!