சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹையாத் ரீஜென்சி நட்சத்திர விடுதியில் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 3-வது சீசன் நடைபெற உள்ளது. இம்முறை போட்டிகளுக்கான எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தொடரின் பரிசுத் தொகை ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாஸ்டர் சேலஞ்சர்ஸ் என இரு பிரிவுகளில் 20 பேர் பங்கேற்க்கவுள்ளனர்.

மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்களான அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, நிஹால் சரின், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், ஜோர்டான் வான் ஃபாரஸ்ட், ரஷ்யாவின் விளாடிமிர் ஃபெடோசீவ், அமெரிக்காவின் ரே ராப்சன் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.
கடந்த 2024 சேலஞ்சர்ஸ் பிரிவில் கோப்பை வென்றதால் இந்தியாவின் பிரணவ் இம்முறை மாஸ்டர் பிரிவில் களம் இறங்குகிறார். சாலஞ்சர்ஸ் பிரிவில் இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களான கார்த்திகேயன் முரளி, வைஷாலி ஹரிகா, லியோன் மெண்டோன்கா, அபிமன்யு புராணிக், அதிபன் பாஸ்கரன், இனியன், ஆர்யன் சோப்ரா, பிரனெஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
தொடர்ந்து, மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூபாய் 25 லட்சம், 2வது மற்றும் 3வது இடம் பெறுபவர்களுக்கு ரூ.15 லட்சம், ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மேலும் சேலஞ்சர்ஸ் வெற்றியாளருக்கு ரூ.7 லட்சமும், 2026ம் ஆண்டு மாஸ்டர்ஸ் போட்டியில் விளையாடுவதற்கான இடமும் வழங்கப்படும்.
இந்நிலையில் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை நடைபெறவிருந்த 3வது சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர், விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் 9-வது மாடியில் மின்சார பிரச்சனையால் தீப்பற்றியதால், புகை முழு விடுதியையும் சூழ்ந்தது. இதனால், வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, அருகிலுள்ள விடுதிக்கு மாற்றப்பட்டனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தொடர் இயக்குநர் கிராண்ட்மாஸ்டர் ஸ்ரீநாத் நாராயணன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முதல் சுற்று ஆகஸ்ட் 6-ல் இருந்து ஆகஸ்ட் 7-க்கு மாற்றப்பட்டது. முன்னர் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஓய்வு நாளாக திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் இப்போது தொடர் இடைவேளையின்றி நடைபெறும். இந்த மாற்றம், 20 வீரர்கள் பங்கேற்கும் இந்த உயர்மட்ட தொடரின் அட்டவணையை பாதிக்காது.
இந்தியாவின் மிக முக்கியமான கிளாசிக்கல் செஸ் தொடரான இது, மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரு பிரிவுகளாக நடைபெறுகிறது. ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன், FIDE சர்க்யூட் புள்ளிகளைப் பெறுவதற்கான முக்கிய தளமாக இத்தொடர் விளங்குகிறது. தொடர் ஆகஸ்ட் 7 முதல் தொடங்கி, ஒவ்வொரு நாளும் மாலை 3 மணிக்கு போட்டிகள் நடைபெறும். இறுதி சுற்று ஆகஸ்ட் 15-ல் மதியம் 1 மணிக்கு தொடங்கும்.